திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை, கற்கள் வீச்சு: போலீஸார் வேடிக்கை பார்த்ததாக டிஜிபியிடம் அதிரடிப் புகார்!
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹுவா மொய்த்ரா மீது மர்ம நபர்கள் சிலர் முட்டை மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்த நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததாக மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அங்கு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, சட்டப்பேரவையில் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல், மக்களவையில் உள்ள 28 திரிணமூல் எம்.பி-க்களில் 20 பேர், 'இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில்' (SCBI) இணைந்து பாஜக-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால், "நாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ்" என்று மம்தா அணியினர் தேர்தல் ஆணையத்திலும், மக்களவை செயலரிடமும் புகார் அளித்துப் போராடி வருகின்றனர்.
கட்சி கூட்டத்தின் போது தாக்குதல்; பாஜக மீது குற்றச்சாட்டு:
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது தொகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வெளியே நேற்று முன்தினம் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு திடீரெனத் திரண்ட மர்ம நபர்கள் சிலர், கூட்டத்தை நோக்கி முட்டைகளையும் கற்களையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநில போலீஸ் டிஜிபி சித்நாத் குப்தாவை நேரில் சந்தித்து மஹுவா மொய்த்ரா புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
"என்னுடைய தொகுதியில் உள்ள கட்சி அலுவலகக் கூட்டத்தில் நான் பங்கேற்ற போது, திட்டமிட்டபடி சிலர் முட்டை மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த அராஜகத்தில் எனக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இந்த வன்முறையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். இத்தாக்குதலில் ஈடுபட்டது ஆளுங்கட்சியான பாஜக-வின் தொண்டர்கள்தான். எனவே, சட்டத்தைக் கையில் எடுத்த அவர்கள் மீதும், கடமை தவறிய போலீஸார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இச்சம்பவம் காரணமாக மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் ஆளும் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.


AthibAn Tv