“விவசாயிகளுக்குப் புதிய சிறப்புத் தொகுப்புத் திட்டம்; அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை” - வேளாண் அமைச்சர் வினோத் உறுதி!

Dina AthibAn
0

“விவசாயிகளுக்குப் புதிய சிறப்புத் தொகுப்புத் திட்டம்; அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை” - வேளாண் அமைச்சர் வினோத் உறுதி!

கும்பகோணம்: "கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் புதிய கோரிக்கைகளை முதன்மையாகக் கொண்டு, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்குப் பயன் தரும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்" என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் அதிரடி உத்தரவு:

விவசாயிகளுக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்:

"சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் இலக்கு நிர்ணயம் (Target) முடிந்துவிட்டது என்று கூறி, தகுதியான சில விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் மறுக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து உடனடியாக விசாரித்து, தவறிழைத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், சேஷம்பாடியில் வசித்து வரும் மக்களுக்கு உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்தித் தரும் வகையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

44 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா:

முன்னதாக, அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் அண்மையில் தீ விபத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் உட்பட 44 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.18.90 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

அரசு கால்நடை மருத்துவமனையில் திடீர் ஆய்வு:

இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரகாரத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அமைச்சர் வினோத் திடீர் விசிட் அடித்தார். அங்கு மருத்துவர்களிடம் கால்நடைகளுக்கான மருந்துகள், தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதா என்றும், ஊழியர்களின் வருகைப் பதிவேடு மற்றும் காலிப் பணியிடங்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையின் குளிரூட்டும் அறையைப் (Cold storage) பார்வையிட்ட அமைச்சர், அலுவலர்களுக்குப் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்:

  • தூய்மைப் பராமரிப்பு: கால்நடை மருத்துவமனை வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

  • நோய் தடுப்பு: தற்போது கால்நடைகளுக்குப் பல்வேறு புதிய நோய்கள் பரவி வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்த தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

  • முறையான சிகிச்சை: பொதுமக்கள் சிகிச்சைக்காகக் கொண்டு வரும் கால்நடைகளுக்கு எவ்விதத் தொய்வுமின்றி உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஏதேனும் குறைகள் அல்லது தேவைகள் இருந்தால் உடனடியாகத் தனது கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!