“விலை கொடுத்து வாங்கப்படும் எம்.எல்.ஏ-க்கள்: குதிரை பேரத்தை ஆளுநர் தடுக்க வேண்டும்” - ஆளுநரிடம் அதிமுக அதிரடி புகார் மனு!
சென்னை: "தமிழகத்தில் தவெக அரசு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைக் குதிரை வேகத்தில் விலை கொடுத்து வாங்கி வருகிறது; ஜனநாயகப் படுகொலை அரங்கேறும் இந்த குதிரை பேரத்தை ஆளுநர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அதிமுக சார்பில் இன்று தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான இன்பதுரை ஆகியோர் இன்று ஆளுநரை நேரில் சந்தித்து இந்த புகார் மனுவை அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
6 எம்.எல்.ஏ-க்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர்: அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "குதிரை பேரம் தொடர்பாக ஏற்கனவே ஆளுநரிடமும், சட்டப்பேரவைத் தலைவரிடமும் (சபாநாயகர்) கொடுக்கப்பட்ட முந்தைய புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று மீண்டும் ஆளுநரிடம் ஒரு நினைவூட்டல் புகார் மனுவைக் கொடுத்துள்ளோம். குதிரை பேரத்தின் மூலமாக இதுவரை 6 அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை வேகத்தில் இந்த தவெக அரசு விலை கொடுத்து வாங்கியுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை உடனடியாக நிறுத்த ஆளுநருக்கு இருக்கும் பிரத்யேக அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
அன்று சொன்ன ஆளுநர் இன்று என்ன செய்கிறார்? - இன்பதுரை கேள்வி: தொடர்ந்து பேசிய அதிமுக நிர்வாகி இன்பதுரை, "சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்தவுடன், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். அப்போது, 'தமிழகத்தில் குதிரை பேரத்தை நடத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்' என்று இதே ஆளுநர் தான் உறுதியளித்தார். அவ்வாறு சொன்ன ஆளுநர், இப்போது கண்முன்னே நடக்கும் முறைகேடுகளைக் கண்டும் காணாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்திற்கு முன்பாக, முதல்வர் விஜய் எங்களுடைய அதிமுக உறுப்பினர்களை ரகசியமாகச் சந்தித்து சில வாக்குறுதிகளைக் கொடுத்தார் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில்தான், அதிமுக கொறடாவின் (Whip) உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக அன்று வாக்களித்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் அளித்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது.
அது நிலுவையில் இருக்கும்போதே, 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தற்போது மேலும் இருவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். குதிரை பேரத்தை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும் கூட அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார். எனவே, ஆளுநர் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்" என்றார்.
ரகசிய காப்பு பிரமாணம் மீறல்: மேலும், தவெக அமைச்சரவைக் கூட்டம் குறித்துப் பேசிய இன்பதுரை, "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ரகசிய காப்பு பிரமாணத்தை முற்றிலும் மீறும் வகையில், தவெகவின் அதிகாரப்பூர்வ அமைச்சரவைக் கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி ஆகிய இரு தனி நபர்கள் கலந்து கொண்டது சட்ட விரோதமானது. இதுகுறித்தும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆளுநர் இந்த விவகாரத்தில் நல்லதொரு சட்டப்பூர்வ முடிவை எடுப்பார் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
செய்திப் பின்னணி: தமிழகத்தில் பாஜகவைத் தொடர்ந்து, தற்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தவெக அரசுக்கு எதிராகக் குதிரை பேரப் புகாரை முன்வைத்து ஆளுநரிடம் மனு அளித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

AthibAn Tv