அடிப்படை வசதிகளுக்குக் கூடுதல் கவனம்; நேர்மையுடன் செயல்படுங்கள்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்!
சென்னை: பொதுமக்களுக்கான கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து மற்றும் ரேஷன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதலாவது மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களின் இரண்டு நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் துறை ரீதியான செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சட்டம் - ஒழுங்கு மற்றும் போதை ஒழிப்புக்கு முக்கியத்துவம்
மாநாட்டின் தொடக்க உரை மற்றும் அடுத்தடுத்த அமர்வுகளில் பேசிய முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிகாரிகள் முதலிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக, போதை ஒழிப்புக்கு எதிரான செயல்பாடுகளில் எவ்வித சமரசமும் இன்றி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிகாரிகள் அனைவரும் அரசியல் அழுத்தங்களுக்கு இடம் தராமல், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், கூட்டத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகளைக் குறிப்பெடுத்துக் கொண்ட முதல்வர், முக்கியக் குறைபாடுகளுக்கு விரைந்து தீர்வுகாணுமாறு தலைமைச் செயலருக்கு அங்கேயே உத்தரவிட்டார்.
சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவம்
மாநாட்டின் நிறைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைப் பாராட்டி முதல்வர் விஜய் விருதுகளையும், கேடயங்களையும் வழங்கினார். அதன் விவரங்கள் பின்வருமாறு:
பசுமை விருதுகள் (2024-25): சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகப் பணியாற்றிய முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் எம்.என்.பூங்கொடி (திண்டுக்கல்), த.பிரபுசங்கர் (திருவள்ளூர்), ஐ.எஸ்.மெர்சி ரம்யா (புதுக்கோட்டை).
தமிழ் ஆட்சிமொழி விருது (2023): தமிழ் மொழியைத் திறம்படச் செயல்படுத்திய முன்னாள் ஆட்சியர்கள் ஆஷா அஜித் (சிவகங்கை), பி.என். ஸ்ரீதர் (கன்னியாகுமரி).
மாற்றுத்திறனாளிகள் நல விருது (2024 & 2025): முன்னாள் ஆட்சியர்கள் ஜெயசீலன் (விருதுநகர்), கே.சாந்தி (தருமபுரி), ஜெ.யு.சந்திரகலா (ராணிப்பேட்டை), பா.பிரியங்கா (தஞ்சாவூர்).
முதல்வர் குறைதீர்ப்பு பிரிவு விருது (2025-26): பொதுமக்களின் மனுக்களுக்குச் சிறந்த முறையில் தீர்வுகண்டதற்காக கன்னியாகுமரி முன்னாள் ஆட்சியர் ரா.அழகு மீனா மற்றும் ஆவடி முன்னாள் போலீஸ் கமிஷனர் சங்கர்.
சுகாதாரக் குறியீடு விருது (2025-26): மருத்துவத்துறையின் 20 சுகாதாரக் குறியீடுகளையும் சிறப்பாகச் செயல்படுத்திய முன்னாள் ஆட்சியர்கள் எஸ்.சரவணன் (திண்டுக்கல்), பவன்குமார் கிரியப்பனவர் (கோவை), துர்கா மூர்த்தி (நாமக்கல்).
குற்றத் தடுப்புப் பிரிவு விருது: குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் எஸ்பிக்கள் வா.வெ.சாய் பிரணீத் (விழுப்புரம்), பெ.தங்கத்துரை (கிருஷ்ணகிரி), விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் (அரியலூர்), ஆர்.ஸ்டாலின் (கன்யாகுமரி).

AthibAn Tv