Type Here to Get Search Results !

“காதல் என்ற பெயரில் கட்டுப்பாடு விதிப்பது அராஜகம்!”: சிங்கப்பெண் அதிரடிப்படை தலைவர் பவானீஸ்வரி அதிரடிப் பேச்சு



“காதல் என்ற பெயரில் கட்டுப்பாடு விதிப்பது அராஜகம்!”: சிங்கப்பெண் அதிரடிப்படை தலைவர் பவானீஸ்வரி அதிரடிப் பேச்சு

சென்னை: சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை சார்பில், 'சமூக வாழ்வில் பெண்களின் பாதுகாப்பு' குறித்த கலந்துரையாடல் மற்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவர் பவானீஸ்வரி, காதல் என்ற பெயரில் பெண்களின் உரிமைகளைப் பறிப்பது காதலே அல்ல என்று திட்டவட்டமாகக் கூறினார். "இந்த உடையைத்தான் அணிய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதும், திருமணம் செய்யவில்லை என்றால் வாழ விடமாட்டேன் என்று மிரட்டுவதும் உண்மையான காதல் கிடையாது. இது காதலின் பெயரால் செய்யப்படும் அராஜகம் மற்றும் மிக மோசமான குற்றமாகும். இதைச் செய்பவர்களுக்கு நிச்சயமாகக் கடுமையான தண்டனை கிடைக்கும். ஒருதலைக் காதல் தோல்வியடைந்தால், அந்தப் பெண் நன்றாக இருக்கட்டும் என்று கடந்து போக வேண்டுமே தவிர, வன்முறையில் ஈடுபடக் கூடாது" என்று அவர் மாணவர்களிடையே அறிவுறுத்தினார்.

உண்மையான அன்பு என்பது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுதான் என்று குறிப்பிட்ட அவர், கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறந்த உதாரணம் என்றார். மேலும் மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை வெற்றியை நோக்கிச் செலுத்த சுயமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தீய பழக்க வழக்கங்கள் வாழ்க்கையைக் கீழே தள்ளிவிடும் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்த அவர், எங்கும் எப்போதும் குற்றம் நடக்கக் கூடாது என்கிற சமூகப் பொறுப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பவானீஸ்வரி, தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக இதுவரை 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பெண்களுக்கான அவசர உதவி எண்ணான 1091-க்குத் தினசரி 1,400-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகவும், அதில் சுமார் 800 அழைப்புகள் காவல்துறை நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும் தன்மையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இதுவரை 9 குழந்தை திருமணங்கள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்தப் பெண் பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தற்போது தமிழகம் முழுவதும் 78 சிங்கப்பெண் அதிரடிப்படை குழுக்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதனை மேலும் விரிவுபடுத்தி ஒவ்வொரு சப்-டிவிஷன் அளவிலும் கொண்டு சேர்க்கும் வகையில், குழுக்களின் எண்ணிக்கையை 270 ஆக உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.