"கடந்த ஆட்சியில் லஞ்சம் கொடுத்து ஏமாந்த ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்கலாம்; பணம் மீட்டுத்தரப்படும்" – பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!
சென்னை:
கடந்த ஆட்சிக் காலங்களில் தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்கள் (Contracts) பெற்றுத் தருவதாகக் கூறி, லஞ்சம் வாங்கி ஏமாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக அறிவித்துள்ளார். அவ்வாறு பணம் கொடுத்து ஏமாந்த ஒப்பந்ததாரர்கள் தைரியமாகப் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களின் பணம் மீட்டுத்தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த கால முறைகேடுகள் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைப் பட்டியலிட்டுள்ளார்.
"மையப்படுத்தப்பட்ட ஊழல், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சம்" – அமைச்சர் சாடல்:
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:
"கடந்த ஆட்சிகளில் தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள் மற்றும் ஒவ்வொரு பணிக்கும் இவ்வளவு என நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத் தொகை எனப் பல அடுக்கடுக்கான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகத் தற்போது துல்லியமாக அறிய முடிகிறது.
குறிப்பாக, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதாகக் கூறி, அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருந்த இடைத்தரகர்கள் எனப் பல தரப்பினரும் ஒப்பந்ததாரர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிப் பெருமளவில் மோசடி செய்துள்ளனர்.
இவ்வாறு பலரிடம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு முறையாக எந்த ஒரு வேலையையும் ஒதுக்காமல் இழுத்தடித்து, ஒப்பந்ததாரர்கள் பலரை ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பான அடுக்கடுக்கான புகார்கள் தற்போது தற்போதைய அமைச்சகத்திற்குத் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன."
புகார் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரி அறிமுகம்!
பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் நலனைக் காக்க அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கியுள்ளார்:
புகார் அளிக்கும் வசதி: கடந்த ஆட்சியில் இதுபோல் லஞ்சம் கொடுத்துப் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பொது மக்கள் யாராக இருந்தாலும், அதுகுறித்து நேரடியாக என்னிடமோ (அமைச்சர் அலுவலகம்) அல்லது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடமோ (DVAC) முறைப்படி புகார் அளிக்கலாம்.
மின்னஞ்சல் மூலம் புகார்: நேரில் வர இயலாதவர்கள் minister.pwd.hd.tn@gmail.com என்ற பிரத்யேக அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் தங்களின் புகார்களை விரிவான ஆதாரங்களுடன் அனுப்பி வைக்கலாம்.
ரகசியம் காக்கப்படும்: புகார் அளிப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அடையாளங்கள் முற்றிலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். மேலும், அவர்கள் லஞ்சமாகக் கொடுத்து ஏமாந்த தொகை மீண்டும் அவர்களிடம் போய்ச் சேர உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மின்வேகத்தில் எடுக்கப்படும்.
"இனிவரும் காலங்களில் தமிழகப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இதுபோன்ற எந்தவொரு முறைகேடுகளோ அல்லது லஞ்சப் புகார்களோ நடைபெறாத வண்ணம் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தூய்மையான நிர்வாகம் உறுதி செய்யப்படும்" என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


AthibAn Tv