Type Here to Get Search Results !

ஹரியானாவில் சோகம்: 220 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 21 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சடலமாக மீட்பு!


ஹரியானாவில் சோகம்: 220 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 21 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சடலமாக மீட்பு!

அம்பாலா:

ஹரியானா மாநிலத்தில் 220 அடி ஆழமுள்ள திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் (Borewell) தவறி விழுந்த 4 வயது சிறுவன், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரின் 21 மணி நேரத் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் அம்பாலா மாவட்டம், தனியோரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சித் சிங், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வயலில் இருந்த தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் அவரது 4 வயது மகன் நிர்வேர் சிங்கும் ஆசையாகச் சென்றுள்ளான்.

21 மணி நேரப் போராட்டம் பலனின்றி முடிந்தது!

செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில், வயலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிர்வேர் சிங், அங்கு எவ்விதப் பாதுகாப்பு மூடியுமின்றி ஆபத்தான முறையில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தான்.

சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தகவல் தெரிந்தவுடன், தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் (Indian Army) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிநவீனக் கருவிகளுடன் மீட்புப் பணியில் ஈடு பட்டனர். சுமார் 21 மணி நேரம் விடிய விடிய நீடித்த உக்கிரமான போராட்டத்திற்குப் பிறகு, நேற்று அதிகாலை 3.40 மணியளவில் சிறுவன் கிணற்றில் இருந்து வெளியே மீட்கப்பட்டான்.

உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் அம்பாலா கன்டோன்மென்ட் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். எனினும், அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கண்ணீருடன் அறிவித்தனர்.

அலட்சியமாக இருந்த விவசாயி மீது கடும் நடவடிக்கை:

இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த நிலத்தின் உரிமையாளரான விவசாயி மீது சட்டப்படியான நடவடிக்கை பாய்கிறது.

இதுகுறித்து அம்பாலா துணை ஆட்சியர் (Deputy Commissioner) அஜய் சிங் தோமர் கூறுகையில், "ஆழ்துளைக் கிணற்றைப் பாதுகாப்பாக மூடாமல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து வைத்திருந்த சம்பந்தப்பட்ட விவசாயி மீது விதிகளின்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

திறந்தவெளி ஆழ்துளைக் கிணறுகளால் தொடர்ந்து பிஞ்சுயிர்கள் பலியாகி வரும் நிலையில், நில உரிமையாளர்கள் தங்களின் ஆழ்துளைக் கிணறுகளைப் பாதுகாப்பாக மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற விதிகளையும், வழிகாட்டுதல்களையும் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.