“பாலஸ்தீன குழந்தைகள் மீது திட்டமிட்ட இன அழிப்பு!”: இஸ்ரேல் ராணுவத்தின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய ஐ.நா. அறிக்கை
ஜெனிவா: இஸ்ரேல் ராணுவமும் அதன் உயர் அதிகாரிகளும் இணைந்து பாலஸ்தீனக் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து, திட்டமிட்ட முறையில் கொடூரமான இன அழிப்பு மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் தனது அதிரடி அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரில், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசேலம் மற்றும் காசா பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து இந்த ஆணையம் விரிவான விசாரணை நடத்தியது. விசாரணைக் குழுவின் தலைவரான ஸ்ரீனிவாசன் முரளிதரர் கடந்த ஜூன் 23-ம் தேதி வெளியிட்ட இந்த அறிக்கையின்படி, 3 ஆண்டுகள் நீடித்த இப்போரில் ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட்ட 73 ஆயிரம் பேரில் 30 விழுக்காட்டினர் (21,289 பேர்) குழந்தைகள் என்பதும், காயமடைந்த 1.80 லட்சம் பேரில் 26 விழுக்காட்டினர் (44,500 பேர்) குழந்தைகள் என்பதும் தெரியவந்துள்ளது. 2025 அக்டோபரில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்பும் இந்த கொடூரங்கள் தொடர்வதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பு இக்குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளது.
காசா நகரில் வாழும் ஒட்டுமொத்தப் பாலஸ்தீன மக்களையும் முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கில், இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு அந்நாட்டுப் பிஞ்சுக் குழந்தைகளில் 2 விழுக்காட்டினரைக் கொன்று குவித்துள்ளதாக இந்த அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 5,031 பேர் என்றும், ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளங்குழந்தைகள் 1,029 பேர் என்றும், புதிதாகப் பிறந்த 420 பச்சிளங்குழந்தைகளும் இஸ்ரேலின் ரத்தவெறிக்கு இரையாகியுள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதோடு, 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாகவும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கேட்கும் திறனையும் இழந்து தவிக்கின்றனர். குழந்தைகளின் உடலில் ஏற்பட்டுள்ள இந்த கொடூரமான சேதங்கள் யதேச்சையான குண்டுவெடிப்புகளால் ஏற்பட்டவை அல்ல; மாறாக, குழந்தைகளைக் கட்டுப்படுத்தவும் மிரட்டவும் இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு நடத்திய சித்திரவதைகள் என்று அறிக்கை கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதல்கள் குறிப்பாக மருத்துவமனைகள், பிரசவ வார்டுகள் மற்றும் சுகாதார மையங்களைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகக் காசா நகரில் தற்போதைய குழந்தைகள் உணவு, குடிநீர், சத்துணவு மற்றும் கல்வி கிடைக்காமல் கடுமையான மனரீதியான மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். போர்ச்சூழலால் இதுவரை 58,544 குழந்தைகள் தங்கள் பெற்றோரையோ அல்லது தந்தை, தாயில் ஒருவரையோ இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். கல்வி கற்கும் வயதிலுள்ள 6.37 லட்சம் குழந்தைகள் முறையான படிப்பின்றி தவிக்கும் வேளையில், பாலஸ்தீனத்தில் உள்ள 93 விழுக்காடு பள்ளிகளை இஸ்ரேல் ராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும், சரிவிகித உணவு இல்லாததால் 3.20 லட்சம் குழந்தைகள் தவித்து வருவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டால் மட்டுமே 151 குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த கொடூரத்தின் உச்சமாக, 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் பாலஸ்தீனத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 44 விழுக்காடு குறைந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருக்கலைவு ஏற்படுவது 300 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசச் சமூகத்தின் தோல்வியையே இந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாகக் கூறி பாலஸ்தீன அரசு ஐ.நா.வின் இந்த விசாரணை அறிக்கையை முழுமையாக வரவேற்றுள்ளது. பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு எதிராகக் கொடூரக் குற்றங்களை இழைத்த இஸ்ரேலிய அதிகாரிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேல் ராணுவம் காசாவில் தனது போர்க்குற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின்படி குழந்தைகளுக்கான கடமைகளை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிக்கை கோரியுள்ளது. இதனுடன், சர்வதேச நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் குடியேற்றக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. விசாரணை ஆணையம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.


AthibAn Tv