“அதிகாரிகளைத் தவிர யாரும் நுழையக்கூடாது!”: ஆய்வு என்ற பெயரில் மனமகிழ் மன்றங்களில் ‘ரீல்ஸ்’ எடுக்க மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி தடை!
மதுரை: "அரசு அங்கீகாரம் பெற்ற மனமகிழ் மன்றங்களுக்குள் (Recreation Clubs) ஆய்வு என்ற பெயரில் யூடியூபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் தொடர்பில்லாத நபர்கள் அத்துமீறி நுழைந்து வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுக்கத் தடை விதிக்கப்படுகிறது" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர் சங்கத் தலைவர் வீரபாண்டியன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சரவணன் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், விதிமுறைகளின்படி துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மட்டுமே இந்த மன்றங்களில் முறையான ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதனை அதிகாரிகள் கண்டிப்புடன் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, மனுதாரர் வீரபாண்டியன் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு முழுவதும் எங்களது சங்க உறுப்பினர்கள் அரசிடம் முறையாக எஃப்.எல்-2 (FL-2) உரிமம் பெற்று, விதிகளுக்கு உட்பட்டு மனமகிழ் மன்றங்களை நடத்தி வருகிறோம். மன்றத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எங்களது செயல்பாடுகளைத் துறை ரீதியான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். இந்த நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் யூடியூப் செயல்பாட்டாளர்கள் என்ற பெயரில் சிலர் மன்றங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து மனுவில், "அவ்வாறு அத்துமீறுபவர்கள், தங்களது செல்போன்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது போல போலியாகச் சித்தரித்து வீடியோக்களைப் பதிவு செய்கின்றனர். குறிப்பாக, மனமகிழ் மன்றங்களில் மது அருந்தும் உறுப்பினர்களின் முகம் மற்றும் அடையாளம் தெளிவாகத் தெரியுமாறு 'ரீல்ஸ்' மற்றும் வீடியோக்களை எடுத்து, அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அங்கு மது அருந்துவோர் மற்றும் ஊழியர்களுடன் தேவையின்றித் தகராறு செய்வதோடு, அந்த வீடியோக்களைக் காட்டி மனமகிழ் மன்ற உரிமையாளர்களைப் பயமுறுத்திப் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்" என்று பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள மனமகிழ் மன்றங்களில், ஆளும் கட்சி நிர்வாகிகள் ஆய்வு என்ற பெயரில் உள்ளே நுழைந்து இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர் என்றும், இதனால் தங்களது தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனவே, மனமகிழ் மன்றங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அத்துமீறல்களைத் தடுக்கவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த நீதிபதி, விசாரணையை அடுத்த தேதிக்கு ஒத்திவைத்தார்.


AthibAn Tv