"கல்வி இன்று கோயிலாக இல்லை... கடையாக மாறிவிட்டது" - புதிய இந்தியாவின் கல்விக் கொள்கையைச் சாடி மாணிக்கம் தாகூர் அறிக்கை!
சென்னை: கல்வியை வணிகமயமாக்கும் கொள்கைகளில் இருந்து விலகி, நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் தரமான, மலிவான மற்றும் சமத்துவமான உயர் கல்வியை உறுதி செய்வதே ஒரு அரசின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது! நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது பெரும் கவலைக்குரியது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் நடுத்தரக் குடும்பங்களின் மிகப்பெரிய கனவாக இருந்த பொறியியல் படிப்பு, இன்று அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஒரு கார்ப்பரேட் வணிகமாக மாற்றப்பட்டு விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். லாபம் கிடைக்கும் வரை மாணவர் சேர்க்கையை நடத்துவதும், லாபம் குறைந்தவுடன் கல்லூரிகளுக்குப் பூட்டுப் போடுவதும்தான் புதிய இந்தியாவின் கல்விக் கொள்கையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் (RSS) சிந்தனையால் வழிநடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சகம், கல்வியை மக்களின் அடிப்படை உரிமையாகப் பார்க்காமல் ஒரு சந்தைப் பொருளாக மாற்றிவிட்டதாகத் தனது பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்துப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டாலும், அதன் மூலம் உயர் கல்வியின் அடிப்படைப் பிரச்சினைகளான கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, தரமான அரசு முதலீடுகளின் குறைவு மற்றும் கல்வி நிறுவனங்களின் வணிகமயமாக்கல் போன்ற எதற்கும் தீர்வு காணப்படவில்லை என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாகவே நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன்று மாணவர்கள் படிப்பை விடத் தங்களது கல்விக் கடனைப் பற்றியே அதிகம் கவலைப்படுவதாகவும், பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வீதிகளில் அலைவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்பை மறந்து வருமானத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதைத் தடுத்து, கல்வி விற்கப்படும் பொருள் அல்ல, அது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

AthibAn Tv