"அதானி வழக்கு வாபஸுக்கும், ரூ.95,000 கோடி முதலீட்டுக்கும் தொடர்பில்லை" - அமெரிக்க நீதித்துறை அதிரடி விளக்கம்!
வாஷிங்டன்: இந்தியத் தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்ட 7 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றதற்கும், அமெரிக்காவில் அதானி குழுமம் மேற்கொள்ளவிருக்கும் 95,000 கோடி ரூபாய் ($11 Billion) மதிப்பிலான பிரம்மாண்ட முதலீட்டுத் திட்டத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அமெரிக்க நீதித்துறை (US Department of Justice) திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதானி குழுமம் மீதான ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களைத் திடீரென வாபஸ் பெற்றது குறித்து, விரிவான விளக்கத்தை அளிக்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பதிலளிக்கும் வகையில், அமெரிக்க முதன்மை இணை துணை அட்டர்னி ஜெனரல் ஆர். ட்ரெண்ட் மெக்காட்டர் (R. Trent McCotter) நீதிமன்றத்தில் முக்கிய அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெரும் தொகையை முதலீடு செய்வதாக அதானி குழுமம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகளை அவர் முற்றிலும் நிராகரித்துள்ளார்.
அதானி குழுமத்தின் முதலீட்டு அறிவிப்பு என்பது முற்றிலும் தனிப்பட்ட வணிக முடிவு என்றும், சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கின் நடவடிக்கைகள் கையாளப்பட்டதே தவிர, எந்தவொரு முதலீட்டுப் பேரத்திற்கும் இதில் இடமில்லை என்றும் அமெரிக்க நீதித்துறை தனது அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அமெரிக்க அரசு தற்போது அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

AthibAn Tv