“சில இயக்கங்களால் ஒரு தோல்விகூட தாங்க முடியவில்லை; ஆனால் திமுக ஆல் போல் வேரூன்றி நிற்கிறது” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

Dina AthibAn
0

“சில இயக்கங்களால் ஒரு தோல்விகூட தாங்க முடியவில்லை; ஆனால் திமுக ஆல் போல் வேரூன்றி நிற்கிறது” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

சென்னை: "தமிழ்நாட்டில் சில இயக்கங்களால் ஒரு தேர்தல் தோல்வியைக்கூடத் தாங்கித் தாக்குப்பிடிக்க முடியவில்லை; ஆனால், திமுக கொள்கை உறவாலும் உடன்பிறப்பு நேசத்தாலும் பிணைக்கப்பட்டு ஆல் போல் வேரூன்றி கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தான் இருவார கால அரசுமுறைப் பயணமாக வெளிநாடு புறப்படும் முன்பாக, கட்சியின் உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியுள்ள விரிவான மடல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

அறிவாலயம் தரும் புத்துணர்ச்சி: "தேர்தல் தோல்வியால் நான் தனிப்பட்ட முறையில் துவண்டுவிடவில்லை என்றாலும், தொண்டர்களாகிய உங்களுக்குள் சோர்வு அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தலைமைப் பொறுப்பும் கடமையும் எனக்கு உள்ளது. அதனை உணர்ந்துதான், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாள்தோறும் கட்சியின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திற்கு வரத் தொடங்கினேன். அங்குத் திருவுருவச் சிலையாக நிற்கும் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் 'மக்களுக்காக உழைப்பதே நம் கடமை' என்று எனக்கு நிதமும் அறிவுறுத்துகின்றனர். 'நெருப்பாறுகளை நீந்திக் கடப்போம் வா' என்று அறிவாலயத்தின் வாயில் என்னை கம்பீரமாய் வரவேற்கிறது."

மக்களை வீழ்த்தும் ‘நாங்க இருக்கோம்’ என்ற சொற்கள்: "தலைமை நிலையத்திற்கு வரும் நிர்வாகிகள், முன்னோடிகள் தொடங்கி ஆதரவாளர்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானோரை நேரில் சந்தித்து வருகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் என் கைகளைப் பற்றிக்கொண்டு ஒற்றைக் குரலில் சொல்வது, 'நாங்க இருக்கோம்... நாம மீண்டும் வருவோம்' என்பதுதான். எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையை இந்தச் சொற்கள் எனக்குக் கொடுக்கின்றன. இந்த வலிமையைத் தொண்டர்கள் கொடுப்பதால்தான் திமுக 75 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிமிர்கிறது. வரலாற்றில் நம்மைப் போல் வெற்றிகளைக் குவித்தவர்களும் இல்லை; அதேநேரம் தோல்விகளைக் கண்டவர்களும் இல்லை. வெற்றியைத் தலையில் ஏற்றாமலும், தோல்வியை இதயத்தில் தேக்காமலும் இருப்பதால்தான் நாம் மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுகிறோம்."

கழகத்தின் மறுசீரமைப்புப் பணிகள்: "கழகத்தின் அடுத்த நூறாண்டு காலப் பயணத்தின் திசையைத் தீர்மானிக்க வேண்டியது என் கடமையாகும். அதனால்தான், 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பி உங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன். தொண்டர்களின் குரல் எவ்வித தயக்கமுமின்றி நேரடியாக என்னை வந்தடைய 'உடன்பிறப்பின் குரல்' என்ற இணையதளத்தையும் உருவாக்கினோம். அதன் மூலம் நீங்கள் உரிமையோடு தந்த ஆலோசனைகளைத் தினசரி இரவில் விரிவாக ஆய்ந்தறிந்தேன்.

அதன் அடிப்படையில், கழகத்தின் மறுசீரமைப்பிற்காக இளமையும் அனுபவமும் கலந்த 'மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு'வை தற்போது அமைத்துள்ளேன். இந்தக்குழு மாவட்டக் கழகங்களின் எல்லை மறுவரையறை, சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழுவின் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை எனக்கு வழங்கும். இந்தியாவிலேயே திமுகவைப் போன்ற வலுவான கட்டமைப்பு கொண்ட அமைப்பு ரீதியான கட்சி வேறெங்கும் இல்லை என்பதைப் பிற மாநிலத் தலைவர்களும், அரசியல் நோக்கர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்."

மனம் அறிவாலயத்தில்தான் இருக்கும்: "கழகத்தின் இந்த மறுசீரமைப்புப் பணிகளை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ள நிலையில்தான், நான் இன்று வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளேன். அடுத்த இரு வாரங்கள் நான் அயலகத்தில் இருந்தாலும், என் சிந்தனை முழுவதும் அண்ணா அறிவாலயத்தைச் சுற்றியே இருக்கும். அங்கு நாள்தோறும் நான் காணும் உங்களின் அன்பு முகங்கள்தான் என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கும்" என்று மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!