“ஆளுநர் மாளிகை என்ன கமலாலயமா?” - தமிழக அரசை கவிழ்க்க அமித்ஷாவும், ஆளுநர் அர்லேகரும் சதி செய்கிறார்கள்; மாணிக்கம் தாகூர் அதிரடி குற்றச்சாட்டு!
சென்னை: "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக அரசை எப்படியாவது கவிழ்த்து, தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஒரு கைப்பாவை அரசை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திட்டம். அதற்கான முதல் படியைத்தான் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தற்போது இங்குத் தொடங்கி இருக்கிறாரா?" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையான சாடலை முன்வைத்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், ஆளுநரின் செயல்பாடுகள், அயோத்தி ராமர் கோயில் ஊழல் மற்றும் மத்திய அரசின் நிதிப் புறக்கணிப்பு குறித்துப் பேசியதன் விரிவான விவரம்:
“ஆளுநர் அலுவலகத்தை கமலாலயம் என்றே மாற்றிவிடலாம்”:
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டு தவெக அரசுக்கு எதிராகச் செயல்படுவதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார்:
"ஆளுநர் அர்லேகர் நடுநிலையாகச் செயல்படாமல் பாஜகவின் நேரடி ஏஜென்ட் போலச் செயல்பட்டு வருகிறார். ஏதோ அவரே ஒரு புதிய கூட்டணியைப் பேசுவது போல அடுத்தடுத்து 3 எதிர்க்கட்சிகளை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், அந்தப் பழைய புகார்களையே ஜெராக்ஸ் போட்டு அவரிடம் கொடுத்ததை ஆளுநரும் அப்படியே பெற்றுக்கொண்டுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு மாநில ஆளுநர் செய்யும் வேலையா? இதற்கு ஆளுநர் அலுவலகத்தை 'கமலாலயம்' (பாஜக தலைமையகம்) என்றே பெயர் மாற்றிவிடலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை மிக்க அரசைச் சதித் திட்டம் மூலம் வீழ்த்த நினைக்கும் அமித்ஷாவின் திட்டத்திற்கு ஆளுநர் துணை போகிறார்."
“அயோத்தி ராமர் கோயிலில் ரூ.8 கோடி ஊழல்”:
உத்தரப் பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் எழுந்துள்ள நிதி முறைகேடுகள் குறித்துப் பேசிய அவர்:
"அயோத்தி ராமர் கோயிலில் சுமார் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை பெரும் ஊழலும், திருட்டும் நடைபெற்றுள்ளது தணிக்கையில் அம்பலமாகியுள்ளது. கடவுள் நம்பிக்கை உடைய கோடிக்கணக்கான பக்தர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களான ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஷ்ரா ஆகியோர் உடனடியாகத் தங்களின் பதவிகளை விலகியிருக்க வேண்டும்.
ஆனால், இந்த இமாலய ஊழல் குறித்துப் பிரதமர் மோடியோ, தமிழக பாஜக தலைவர்களான நைனார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரோ வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக 'சிறப்புப் புலனாய்வுக் குழு' (SIT) அமைத்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்."
கோயில் சொத்துக்களைப் பறிக்க ஆர்எஸ்எஸ் சதி:
"தமிழகத்தில் கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் (HR&CE) கீழ் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் அங்கு முழுமையான வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. சட்டமன்றத்தில் கணக்குகளைக் கேள்வி கேட்கவும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் சரிபார்க்கவும் முடிகிறது. ஆனால், ராமர் கோயில் போன்ற வை தனியார் அறக்கட்டளையின் கீழ் இருப்பதால், ஆர்டிஐ வரம்பிற்குள் வராமல் ஊழல்களைக் கேள்வி கேட்க முடியாமல் போகிறது. இதனால்தான் தமிழகத்திலும் கோயில் சொத்துக்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் சதித் திட்டம் தீட்டுகின்றனர்" என்று விளக்கினார்.
100 நாள் வேலைத்திட்ட நிதி குறைப்பு - ரூ.5,000 கோடி சுமை:
மத்திய அரசின் நிதிப் பகிர்வு பாரபட்சம் குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர்: "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான (100 நாள் வேலைத்திட்டம்) மத்திய அரசின் நிதிப் பங்கீட்டை 90:10 என்ற விகிதத்திலிருந்து, 60:40 ஆக மோடி அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இதனால் தமிழக அரசுக்குக் கூடுதலாக ரூ.5,000 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கிராமப்புறப் பொருளாதாரத்தை முழுமையாக உடைத்து, ஏழைக் கிராம மக்களை நகரங்களுக்குக் கூலிகளாக விரட்டுவதே மோடியின் நோக்கமாக உள்ளது" எனச் சாடினார்.
நீண்ட காலக் கூட்டணியாகத் தொடரும்:
"நாளை (இன்று) நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் அவசரச் செயற்குழுக் கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட 'மதச்சார்பற்ற சமூக நீதிக்கானக் கூட்டணி' என்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; இது மக்கள் நலனுக்கான நீண்ட காலக் கூட்டணியாகத் தொடர்ந்து நீடிக்கும். பாசிச பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தவறுகளைத் துணிச்சலோடு நெஞ்சுக்கு நேராக எதிர்ப்பதே காங்கிரஸின் முதன்மைக் கொள்கை" என்று மாணிக்கம் தாகூர் உறுதியளித்தார்.

AthibAn Tv