ஒடிசா 5-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராயின் சினிமா பாடல்: 1,600-க்கும் மேற்பட்ட பிழைகளால் கல்வித்துறை கடும் அதிர்ச்சி!
புவனேசுவரம்:
ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 5-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தித் திரைப்படப் பாடல் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப் பாடப்புத்தகத்தில் சினிமா பாடல் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கல்வியாளர்களும் பொதுமக்களும் தங்களது கடும் கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.
ஒடிசா மாநில அரசால் அண்மையில் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் புதிய பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியாகிப் சூப்பர் ஹிட்டான ஹம் தில் தே சுகே சனம் திரைப்படத்தின் புகழ்பெற்ற 'நிம்புடா நிம்புடா' என்ற பாடல் அப்படியே அச்சிடப்பட்டுள்ளது. உண்மையில், இது ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடலாகும். பாடப்புத்தகத்தைத் தொகுக்கும் போதோ அல்லது அச்சிடும் போதோ ஏற்பட்ட மிகப்பெரிய கவனக்குறைவு காரணமாக, இந்த விசித்திரமான பிழை நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
8-ஆம் வகுப்புப் புத்தகத்தில் மட்டும் 705 பிழைகள்:
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (SCERT) பாடப்புத்தகங்கள் அனைத்தும் அவசரமாகத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், மாநிலப் பாடப்புத்தகங்களில் மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட அச்சுப் பிழைகளும் உள்ளடக்கப் பிழைகளும் கண்டறியப்பட்டு கல்வித்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் மட்டுமே அதிகபட்சமாக 705 பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவிட்டார் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி!
பாடப்புத்தக விவகாரம் குறித்துப் பேசிய ஒடிசா மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட், "கண்டறியப்பட்டுள்ள அனைத்து பிழைகளும் போர்க்கால அடிப்படையில் உடனடியாகத் திருத்தப்பட்டு, தூய்மையான புதிய புத்தகங்கள் விரைவில் மாணவர்களுக்குத் தடையின்றி வழங்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இவ்வளவு பெரிய குளறுபடிகள் நடந்தது எப்படி என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக்குக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.


AthibAn Tv