17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, நகை-பணம் பறிப்பு: சென்னை வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!

Dina AthibAn
0


17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, நகை-பணம் பறிப்பு: சென்னை வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!

சென்னை: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 17 வயது சிறுமியைக் காதலித்து ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அச்சிறுமியின் வீட்டில் இருந்த நகை மற்றும் ரூ.10.75 லட்சம் பணத்தை மிரட்டிப் பறித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

வெளிநாடு செல்லலாம் என ஆசைவார்த்தை

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (20). இவர் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளிச் சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது, தான் அச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணம் முடிந்த பிறகு இருவரும் வெளிநாட்டுக்குச் சென்று குடியேறிவிடலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியை, ஞானப்பிரகாஷ் பலமுறை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், வெளிநாடு செல்வதற்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, சிறுமியை வற்புறுத்தியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய அந்தச் சிறுமி, பெற்றோரின் அனுமதியின்றி வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.10.75 லட்சம் ரொக்கப் பணத்தைச் சிறுகச் சிறுக எடுத்து ஞானப்பிரகாஷிடம் கொடுத்துள்ளார்.

தந்தை நடத்திய விசாரணையில் அம்பலமான உண்மை

திரைத்துறையில் பணியாற்றி வரும் சிறுமியின் தந்தை, தனது ஊழியர்களுக்கு வழங்குவதற்காக வீட்டில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் காணாமல் போவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் தனது மகளிடம் தீர விசாரணை நடத்தினார்.

பகீர் வாக்குமூலம்: விசாரணையின் போது, அந்தச் சிறுமி அழுதுகொண்டே தன்னை ஒரு வாலிபர் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதையும், தன்னை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்து வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி விவரத்தையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், கடந்த 2022-ஆம் ஆண்டு அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஞானப்பிரகாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

20 ஆண்டு சிறை மற்றும் ரூ.7.50 லட்சம் இழப்பீடு

இதுதொடர்பான வழக்கு சென்னை அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வெற்றி ஆஜராகி, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

வழக்கின் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி ஜி. பிரபாகரன், குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஞானப்பிரகாஷூக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த விபரீத சம்பவத்தால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்குத் தமிழக அரசு ரூ.7.50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!