ரூ.16,350 கோடி மதிப்பில் புதிய இரும்பு ஆலை திட்டம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!
அமராவதி: ஆந்திரப் பிரதேசம் கடப்பா மாவட்டம், ஜம்மலமுடுகு மண்டலம், சுண்ணப்பு ராள்ளபல்லி என்ற இடத்தில் சுமார் 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட புதிய இரும்புத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நேரில் கலந்துகொண்டு முறைப்படி தொடங்கி வைத்தார். இத்துடன், விஜயநகரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜிந்தால் தொழில் பூங்கா’வையும் அவர் காணொலிக் காட்சி (Video conferencing) வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்தத் தொடக்க விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது, "இந்த இரும்புத் தொழிற்சாலை திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்துள்ளதன் மூலம், ராயலசீமா பகுதியில் ஒரு புதிய தொழில் புரட்சிக்கான அத்தியாயம் தொடங்கியுள்ளது. ராயலசீமா என்பது வறண்ட பூமி அல்ல; அது தண்ணீரின் ஊற்று. கடந்த ஆட்சியில் உயிரற்ற நிலமாக மாற்றப்பட்டிருந்த இப்பகுதியை, தற்போது நாம் தண்ணீர் ஊற்றி மீண்டும் துளிர்க்க வைத்துள்ளோம். தற்போது புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை முதலீடுகள் மூலமாக ராயலசீமா மாவட்டங்கள் மிகவும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், இத்தொழிற்சாலைக்காக அரசு சார்பில் 1,100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இங்கு இரண்டு சீசன்களில் மொத்தம் 2 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் நிவாச வர்மா, பாஜக மாநிலத் தலைவர் மாதவ், ஜம்மலமுடுகு தொகுதி எம்.எல்.ஏ ஆதிநாராயண ரெட்டி உட்படப் பல முக்கியப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

AthibAn Tv