125 நாள் வேலை திட்டம்: விதிகளில் மாற்றம் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம் – தமிழக அரசுக்கு ₹5,000 கோடி கூடுதல் நிதிச்சுமை!
சென்னை:
மத்திய அரசால் நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் ‘வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ (VB-G RAM G) விதிகளில் முக்கிய மாற்றங்களையும், தளர்வுகளையும் செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள இப்புதிய திட்டத்தின் தற்போதைய கட்டுப்பாடுகள், தமிழக அரசுக்கு ₹5,000 கோடிக்கும் அதிகமாகக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும், இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ₹12,642 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மத்திய அரசின் பங்களிப்பு ₹7,585 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் நிதிப் பகிர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக வேறுபட்ட கட்டமைப்பில் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவினங்களுக்கு மத்திய அரசு 100% நிதியுதவியைத் தொடர வேண்டும் என்றும், கட்டுமானப் பொருட்களுக்கான செலவை 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார். மேலும், டெல்லியில் இருந்து கொண்டு நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கணக்கீட்டின் கீழ் 'மைக்ரோமேனேஜ்மென்ட்' செய்வதைத் தவிர்த்து, உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில் நிதிப் பகிர்வுக்கான தனிப்பட்ட வழிமுறைகளை வகுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் மற்றும் மாநில வீட்டுவசதித் திட்டங்களை இணைக்கக் கோரிக்கை
விவசாயப் பணிகளைப் பாதிக்காத வகையில், ஒவ்வொரு நிதி ஆண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவித்துப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த இச்சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால், ‘எல் நினோ’ போன்ற கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களால் விவசாயக் கால அட்டவணை அடிக்கடி மாறுவதால், இந்த 60 நாட்கள் முதன்மைப் பருவத்தை முன்கூட்டியே நிலையானதாக அறிவிப்பதற்குப் பதிலாக, உள்ளூர் சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மாற்றி (Dynamically) அறிவிக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், இப்புதிய திட்டம் மத்திய அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுடன் மட்டுமே ஒருங்கிணைக்க அனுமதி அளிக்கிறது. ஆனால், "அனைவருக்கும் வீடு" என்பதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ள தமிழக அரசு, பின்தங்கிய மக்களுக்காகப் பல மாநில வீட்டுவசதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனவே, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் வீட்டுவசதித் திட்டங்களையும் இந்த திட்டத்தின் கீழ் ஊதிய வேலைவாய்ப்போடு ஒருங்கிணைக்க அனுமதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இது திட்ட இலக்குகளை விரைவுபடுத்த பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மகாத்மா காந்தி' பெயரைத் தொடர வலியுறுத்தல்
திட்டங்களை உரிய காலத்தில் களத்தில் செயல்படுத்துவதற்கு, நிர்வாக ரீதியான ஒப்புதல் அளிக்கும் அதிகாரங்களை மாநிலங்களுக்கே பரவலாக்க வேண்டும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின்படி, ஒவ்வொரு உள்ளூர் அல்லது மாநிலத் திட்டங்களையும் மத்திய அரசு தனித்தனியாக அறிவிக்க வேண்டியுள்ளதால் தேவையற்ற நிர்வாகத் தாமதம் ஏற்படும். எனவே, மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு திட்டங்களை ஒருங்கிணைக்கும் மற்றும் ஒப்புதல் அளிக்கும் முழு அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, மகாத்மா காந்தியின் மாண்பைப் போற்றும் வகையிலும், இத்திட்டத்தின் மீது பொதுமக்கள் பல ஆண்டுகளாகக் கொண்டுள்ள நன்மதிப்பைத் தக்க வைக்கும் வகையிலும், இப்புதிய திட்டத்தை 'மகாத்மா காந்தியின்' பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேசிய அளவில் முன்னோடியாகத் திகழும் தமிழகத்தின் இந்த நியாயமான முன்மொழிவுகளைப் பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


AthibAn Tv