“மின்சார வாரிய பணி நியமனங்களில் மாபெரும் அநீதி; வெளிப்படையான விசாரணை தேவை” - அண்ணாமலை அதிரடி அறிக்கை!
சென்னை: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நடவடிக்கைகள் குறித்து அரசு உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அரசின் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார்.
ஆறு ஆண்டு காத்திருப்பும் ஏமாற்றமும்:
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடந்த 2020-ம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக முதலில் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு நிர்வாகக் காரணங்களைக் கூறி இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இனி TNPSC மூலமாகத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு மூன்று ஆண்டுகளாக எந்தவொரு புதிய அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தேர்வு விதிகளில் திடீர் மாற்றம்:
இந்த நிலையில், கடந்த 2024 ஜூலை 26 அன்று பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலி பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக அரசு ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, முன்பு ரத்து செய்யப்பட்ட மின்சார வாரியத்தின் 195 உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்கள், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு வயது வரம்பும் 32 என்று நிர்ணயிக்கப்பட்டது.
மறு அறிவிப்புக்காகக் காத்திருந்த இளைஞர்களை ஏமாற்றிவிட்டு, அதே பணியிடங்களைப் பொதுப்பணித்துறை தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது அந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். அரசின் இந்த நிர்வாகக் குளறுபடியால் தகுதியான பல இளைஞர்கள் வயது வரம்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது."
வயது வரம்பு தளர்வில் பாரபட்சம்:
கொரோனா பெருந்தொற்றால் தேர்வுகள் தாமதமானால் வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும் என்ற அரசின் விதி, 2020-ல் இருந்து காத்திருக்கும் இவர்களுக்கு எப்படிப் பொருத்தமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, மேலும் குறிப்பிட்டதாவது:
"இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த ஜனவரி 23, 2026 அன்று வெளியாகின. தற்போது பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு (Counselling) தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட தேர்வு வாரியம் தகுதி நீக்கம் செய்துள்ளது மிகுந்த துரதிருஷ்டவசமானது.
ஏற்கனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதேபோல, கடந்த 2013-ம் ஆண்டிலும் விதி 91(h) மூலம், ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை அப்போதைய மின்சார வாரியம் வழங்கியிருந்தது. அதே போன்றதொரு சூழ்நிலைதான் தற்போதும் நிலவுகிறது."
அண்ணாமலையின் முக்கியக் கோரிக்கைகள்:
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்:
வெளிப்படையான விசாரணை: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் TNPSC-யின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.
சிறப்பு வயதுத் தளர்வு: கடந்த கால முன்னுதாரணங்களைப் பின்பற்றி, நிர்வாகத் தாமதத்தாzzzzzzzzல் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை மட்டும் (One-time relaxation) சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும்.
முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு, கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ அல்லது விதிகளையோ திடீரென மாற்றும் முறைகேடுகளுக்கு அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை மிக அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.



AthibAn Tv