“அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சி முரண்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்” - விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி பேட்டி!
மதுரை: "அதிமுகவின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏக்கள்) இதுவரை தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்றால், அது அந்தப் கட்சிக்குள் நிலவும் மிக முக்கியமான உட்கட்சிப் பிரச்சினை. எனவே, அதிமுகவுக்குள் உண்மையில் என்ன நடக்கிறது, அங்குள்ள உட்கட்சி முரண்பாடுகள் என்னென்ன என்பதையே தற்பொழுது வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு ஆதரவு நல்கும் அத்தனை கூட்டணிக் கட்சிகளும் தங்களின் வாக்குகளில் இருந்து மாற வாய்ப்பே இல்லை. விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐ.யு.எம்.எல் (IUML) ஆகிய கட்சிகள் தவெகவுக்கு அளித்த தங்களது வாக்குறுதிகளைக் கட்டாயம் காப்பாற்றும். அனைத்துக் கட்சிகளுக்கும் முன்பாகவே, காங்கிரஸ் கட்சி தங்களது ஆதரவை மட்டும் தராமல், கூட்டணியிலும் இணைகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உறவை பலப்படுத்திக் கொண்டது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் வரை முழுமையாகத் தொடர வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என இடதுசாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்; அதே நிலைப்பாட்டைத்தான் விசிகவும் கொண்டுள்ளது. எனவே, தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சுமுகமாக இயங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார். மேலும், தவெக சார்பில் நடைபெறவுள்ள கூட்டணிக் கட்சிகள் கூட்டத்திற்குத் தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், அதில் விசிகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர் நேரில் பங்கேற்பார்கள் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் குறித்துப் பேசிய அவர், "அதிமுக எம்.எல்.ஏக்கள் ஏன் அடுத்தடுத்து ராஜினாமா செய்கிறார்கள் என்ற உண்மைக் காரணத்தை விடுத்து, யூகங்களின் அடிப்படையில் மட்டுமே இங்கு விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களே தங்களது பதவிகளைத் துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றால், அதிமுகவுக்குள் நிலவும் உண்மையான உட்கட்சி முரண்கள் என்ன என்பதைத்தான் விவாதப் பொருளாக்க வேண்டும். யூகங்களின் அடிப்படையில் விவாதங்களின் திசை வழியையே மாற்றும் வேலைகள் நடக்கின்றன. 6 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியிருப்பது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று, இதுகுறித்து அதிமுகவினரிடம்தான் முழுமையாகக் கேட்க வேண்டும்" எனத் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


AthibAn Tv