“ஒரே மாதத்தில் அதலபாதாளத்திற்குச் சென்ற தமிழ்நாடு; எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்!” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
சென்னை: "ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரே மாதத்திற்குள்ளேயே தமிழகம் இன்றைக்கு அதலபாதாளத்திற்குப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம், அதற்கு திமுக-வினர் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மாற்றுக் கட்சியினர் 5,000 பேர் திமுகவில் இணைவு:
சென்னை வானகரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் ஏற்பாட்டில் பிரம்மாண்ட இணைப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் தங்களை முறைப்படி திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
"எம்ஜிஆர் இருந்த இயக்கத்திற்கு வந்துள்ளீர்கள்" - வரலாறு பகிர்ந்த ஸ்டாலின்:
விழாவில் புதியதாக இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து, பவள விழா கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரோடு எம்.ஜி.ஆர். இருந்த, அவர் பொருளாளராக இருந்து செயல்பட்ட இயக்கத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் எம்.ஜி.ஆர் முதன்முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.
அவர் தனிக்கட்சி கண்ட பிறகும், சட்டப்பேரவையில் கலைஞரை ஒருவர் பேரைப் குறிப்பிட்டுப் பேசியபோது, அன்றைக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், 'உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்; ஆனால் எனக்குத் தலைவர் கலைஞர்தான்' என்று கண்டித்து, அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொன்னார். இதுதான் வரலாறு."
முன்னாள் அமைச்சர் பென்ஜமினுக்குப் பாராட்டு:
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முன்னாள் அமைச்சர் பென்ஜமினைப் பாராட்டிப் பேசிய ஸ்டாலின், "அதிமுகவில் இணைந்து பல ஆண்டுகள் உண்மையாக உழைத்து, மாமன்ற உறுப்பினர், துணை மேயர், ஊரகத் தொழில் துறை அமைச்சர் எனப் படிப்படியாக உயர்ந்தவர் பென்ஜமின். அவர் அமைச்சராக இருந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான எங்களின் கேள்விகளுக்குப் புள்ளிவிவரத்தோடும், ஆதாரங்களோடும் ஆணித்தரமாகப் பதில் சொல்வதை நாங்கள் ரசித்ததுண்டு.
பொதுவாகத் தேர்தல் முடிந்தவுடன் ஆளுங்கட்சியை நோக்கித்தான் மக்கள் செல்வார்கள். ஆனால், நீங்கள் பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ அல்லாமல் 'கொள்கைதான் முக்கியம்' என்ற உணர்வோடு எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்துள்ளீர்கள். இது பெருமைப்பட வேண்டிய விஷயம்" என்றார்.
"திமுக ஆட்சியில் வான்முட்ட வளர்ந்த தமிழ்நாடு!"
கடந்த திமுக ஆட்சியின் சாதனைகளை நினைவுகூர்ந்த அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு இதுவரை கண்டிராத வளர்ச்சியைப் பார்த்தது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தினோம். உலகளாவிய மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் நமது ஆட்சியை நம்பித் தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்கினர்; வேலைவாய்ப்புகள் பெருகின. அண்டை மாநில முதலமைச்சர்கள் கூட இதனைப் பாராட்டினர்" என்று குறிப்பிட்டார்.
ஒரே மாதத்தில் சீரழியும் சட்டம்-ஒழுங்கு:
தற்போதைய புதிய ஆட்சியைச் சாடிப் பேசிய மு.க.ஸ்டாலின், "ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் நடந்த ஒரே மாதத்திற்குள் தமிழ்நாடு அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. புதிய ஆட்சியை நம்பித் தமிழ்நாட்டுக்கு வரத் தொழில் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள்; வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். பாலியல் கொடுமைகள், போதை மருந்து நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டுகள் எனத் டிவியை பார்த்தாலே அராஜகச் செய்திகள்தான் வருகின்றன. பல குற்றங்களில் ஆளுங்கட்சிக்காரர்களே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் எனப் பல பிரச்சினைகள் இருந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘டேக் டைவர்ஷன்’ (Take Diversion) என்று திசைதிருப்பும் வேலைகளில்தான் இந்த ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று கடுமையாக விமரிசித்தார்.
"மெஜாரிட்டி இல்லாத ஆட்சி... விரைவில் தேர்தல்!"
தற்போதைய தவெக ஆட்சியின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசியதாவது:
"தற்போது நடைபெறும் ஆட்சி என்பது, அவர்கள் மெஜாரிட்டியில் பெற்ற ஆட்சி அல்ல. மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் வர வேண்டும், ஆனால் அவர்கள் பெற்றது வெறும் 108 இடங்கள் தான். 'திமுகதான் வெற்றி பெற வேண்டும்; ஸ்டாலின்தான் முதல்வராக வேண்டும்' என்று தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்த போதிலும், நம்முடன் இருந்த கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் இன்றைக்கு இந்த வண்டி (ஆட்சி) ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வண்டி எங்கே போய் நிற்கப் போகிறது என்று தெரியவில்லை. தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கழித்து வரலாம். எந்தச் சூழ்நிலை வந்தாலும் நாம் அதற்கு 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும். கழகத்தின் வெற்றிக்கு இந்த நிமிடத்திலிருந்தே உழையுங்கள்; உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் உங்களைத் தேடி வரும்" என்று தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தார்.



AthibAn Tv