போலியோ சொட்டு மருந்து முகாமில் ‘ரீல்ஸ்’ விவகாரம்: தவெக ஒன்றிய செயலாளர் முத்துவேல் அதிரடி நீக்கம்!

Dina AthibAn
0


போலியோ சொட்டு மருந்து முகாமில் ‘ரீல்ஸ்’ விவகாரம்: தவெக ஒன்றிய செயலாளர் முத்துவேல் அதிரடி நீக்கம்!

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் அரசு அதிகாரி போல் ஆய்வு செய்து, குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்குவது போன்ற காட்சிகளைச் சினிமா பாடலுடன் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றியச் செயலாளர் முத்துவேல், கட்சியின் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளை மீறியதாக, தவெக மாவட்டச் செயலாளர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 28-ம் தேதி போதை தடுப்பு மற்றும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்குச் சென்ற தவெக விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் முத்துவேல், அங்குள்ள மருத்துவ அதிகாரிகளைப் போல ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கு வந்த குழந்தைகளுக்குத் தானே சொட்டு மருந்து வழங்குவது போல வீடியோவாகப் பதிவு செய்து, அதற்குப் பின்னணிச் சினிமா பாடலை இணைத்துத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சிகிச்சைகளை உரிய அனுமதியின்றி வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகச் சுகாதாரத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில், தவெக நிர்வாகி முத்துவேல் வெளியிட்ட இந்த ரீல்ஸ் வீடியோ பொதுவெளியிலும், இணையத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தவெக தலைமைக்குச் சென்றதை அடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான எம்.எல்.ஏ செல்வம் வெளியிட்டுள்ள உத்தரவில், "கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் முரணான செயல்பாடுகளில் முத்துவேல் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து முத்துவேல், இன்று முதல் 3 மாத காலத்திற்குத் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான அரசு முகாமில் அரசியல் லாபத்திற்காக ரீல்ஸ் எடுத்த நிர்வாகியை, கட்சித் தலைமை உடனடியாகப் பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!