நலத்திட்ட உதவி என ரேஷன் அரிசி வழங்கிய தவெக எம்எல்ஏ? - நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் அதிரடி வலியுறுத்தல்!
சென்னை: மதுரையில் நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசியை விநியோகித்ததாக எழுந்துள்ள புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ எஸ்.ஆர்.தங்கப்பாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில், "மதுரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கான அரசு ரேஷன் அரிசியை முறைகேடாகப் பெற்று, அதைத் தங்களின் சொந்த நலத்திட்ட உதவியாக விநியோகித்ததாக மதுரை மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி மீது எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் அரிசியை, அரசியல் கட்சியினர் தங்களின் சொந்த உதவி போலக் காட்டி விளம்பரப்படுத்திக் கொள்வது வெட்கக்கேடான செயலாகும்" என்று நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், விநியோகிக்கப்பட்ட அந்தப் பைகளில் துர்நாற்றம் வீசிய தரமற்ற ரேஷன் அரிசி இருந்ததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அந்த அரிசிப் பைகளைப் பறிமுதல் செய்து, ஆய்வகச் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் உள்ள உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய விதிமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


AthibAn Tv