“திவால் ஆகிறதா ஆவின் நிறுவனம்?” - உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அதிரடி வலியுறுத்தல்!

Dina AthibAn
0


“திவால் ஆகிறதா ஆவின் நிறுவனம்?” - உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அதிரடி வலியுறுத்தல்!

சென்னை: "ஆவின் பால் விநியோகம் மற்றும் தரம் தொடர்பான புகார்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் ஆவின் நிறுவனம் மீண்டும் செழித்து வளர்வதற்கான அவசர நடவடிக்கைகளை முதல்வர் ஜோசப் விஜய் எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கண்டன அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில தினங்களில் மட்டும் ஆவின் நிறுவனம் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. குறிப்பாக, கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கான 2 ரூபாய் தள்ளுபடி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் சுமார் 30% வரை குறைந்துள்ளதோடு, சில ஆவின் நிலையங்களில் ஒரு நபருக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற கடுமையான கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, கடந்த மே மாதத்தில் மட்டும் 10 மாவட்டங்களில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் 60 சதவீதத்திற்கும் மேலானது முறையான தர விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் அன்றாட அடிப்படைத் தேவைக்காகப் பெருமளவில் நம்பியிருக்கும் ஆவின் நிறுவனத்தில் இத்தகைய குளறுபடிகள் நீடித்தால், பொதுமக்கள் வேறு வழியின்றி இரட்டிப்பு விலை கொடுத்து தனியார் நிறுவனங்களை நாட வேண்டிய அவலநிலை ஏற்படும் என்றார். இது தமிழக மக்களுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதோடு, அவர்களின் ஊட்டச்சத்தையும் பலிகடாவாக்கிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், "ஆவினுக்குப் பால் வழங்கும் விவசாயிகளுக்கு முந்தைய திமுக அரசு போதிய ஊக்கத் தொகையை வழங்கத் தவறியதால், பால் கொள்முதல் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதிக உற்பத்திச் செலவு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில், தற்போதைய ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஆவின் பாலின் தரத்திலும், விநியோகத்திலும், பொதுமக்களுக்குக் கிடைக்கும் சலுகைகளிலும் சமரசம் செய்துகொண்டு, நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய முயல்வது கடும் கண்டனத்திற்குரியது" என்று சாடியுள்ளார். எனவே, மக்களின் ஊட்டச்சத்தில் கைவைக்கும் திட்டங்களை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், ஆவினில் நடந்த முறேகடுகளையும், ஆவின் நிறுவனம் சந்தித்து வரும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு முதல்வர் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அண்டை மாநிலங்களின் 'அமுல்' போன்ற பால் கூட்டுறவு நிறுவனங்களைப் போல, ஆவினும் தமிழ்நாட்டில் செழிக்கப் போதிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்த அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!