“பாஜகவின் 'மதமாற்ற தடைச் சட்ட' அஜெண்டாவுக்கு தவெக அரசு சிவப்புக் கம்பளம் விரிக்கிறதா?” - திமுக சிறுபான்மையினர் பிரிவு அதிரடி அறிக்கை!
சென்னை: "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை மதுரை கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூக நீதி வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இந்த வழக்கில் தவெக அரசு காட்டிய மெத்தனப்போக்கைப் பார்க்கும்போது, இது மறைமுகமாக பாஜகவின் ‘மதமாற்ற தடைச் சட்ட’ அஜெண்டாவுக்குத் துணைபோகிறதோ என்று பலமான சந்தேகம் எழுகிறது" என திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ.சுபேர்கான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக அரசின் அலட்சியத்தால் வந்த பின்னடைவு:
இது குறித்து திமுக நிர்வாகி அ.சுபேர்கான் வெளியிட்டுள்ள காரசாரமான கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூக நீதி வரலாற்றில், ஒருவரின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே உரிமைகள் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இஸ்லாமியர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 3.5% உள்ஒதுக்கீடு வழங்கியதும் அந்த போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான்.
ஆனால், இன்று தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளாலும், சட்ட ரீதியான அலட்சியத்தாலும் அந்த அடிப்படைத் தகர்க்கப்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன."
"மதம் மாறினாலும் சமூகப் புறக்கணிப்பு மறைந்துவிடாது!"
"இஸ்லாத்துக்கு மதம் மாறிய நபர் ஒருவர் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கில், மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும் அரசாணையை (G.O.31) நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 (Article 25) ஒரு குடிமகன் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்ற முழு சுதந்திரம் அளிக்கிறது. ஆனால், தற்போதைய தீர்ப்பில், 'இஸ்லாமிற்கு மாறிய ஒருவர் வெறும் முஸ்லிம் மட்டுமே, அவருக்குப் பழைய சாதி அடையாளம் கிடையாது' என்று கூறி இடஒதுக்கீட்டை மறுத்திருப்பது தேன் தடவிய நஞ்சாக இருக்கிறது.
மதம் மாறுவதால் ஒருவரின் ஆன்மிக நம்பிக்கை மாறலாம்; ஆனால் அவர் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த சமூகப் புறக்கணிப்பும், கல்விப் பின்னடைவும் ஒரு நாளில் மறைந்துவிடாது. இந்த அடிப்படை உண்மையை நீதிமன்றத்தில் நிலைநிறுத்த தவெக அரசு முற்றிலும் தவறிவிட்டது" என்று சுபேர்கான் சாடியுள்ளார்.
தவெக - பாஜக கள்ளக்கூட்டணி?
வழக்கு விசாரணையின் போது தவெக அரசு வரலாற்றுத் தரவுகளையோ, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளையோ முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்ட அவர், மேலும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்:
பெரிய அமர்வுக்கு மாற்றாதது ஏன்?: இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கனவே வழங்கிய தீர்ப்புகளுக்கு மாறாக இந்தத் தீர்ப்பு வரும்போது, வழக்கை ஒரு பெரிய அமர்வுக்கு (Larger Bench) மாற்ற வேண்டும் என்று கோர வேண்டிய அரசியல் பொறுப்பு தவெக அரசுக்கு இருந்தது. அதைச் செய்யாமல் மௌனம் காத்தது, சிறுபான்மையினர் உரிமைகளை பாஜகவின் பலிபீடத்தில் ஏற்றி வைப்பதற்குச் சமம்.
அவசரகதி விசாரணை: மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விலகிய பிறகும் அவசரகதியில் வழக்கை முடிக்க நீதிமன்றம் முற்பட்டபோது, இயற்கை நீதியைக் காக்க அரசுத் தரப்பு வலுவாக குரல் கொடுக்கவில்லை.
"மதம் மாறினால் இடஒதுக்கீடு பறிப்பு என்ற அச்சுறுத்தலின் மூலம், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் பாஜகவின் மறைமுக மதமாற்ற தடைச்சட்டத் திட்டத்திற்கு தவெக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. அந்த அஜெண்டாக்களுக்கு இணக்கமான முதல்வரின் அரசு, இணக்கமான சட்டத்துறை அமைச்சர் என தவெக அரசு பாஜகவுடன் பேணும் இணக்கம் மக்களிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று அ.சுபேர்கான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் போராட்டம் தொடரும்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’ கொண்டு வந்த போது, திராவிட முன்னேற்ற கழகம் முன்னணியில் நின்று போராடி அதனை முறியடித்ததை நினைவு கூர்ந்த அவர், "தற்போது வந்திருக்கிற நெருக்கடியிலும், திமுக தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கருணாநிதியின் வழி நின்று நமது உரிமைகளைத் தாரை வார்க்கும் தவெக அரசின் கள்ளத்தனமான கூட்டணியை அம்பலப்படுத்துவோம். சமூகநீதியை நிலைநாட்டி, சிறுபான்மையினரின் உரிமைகளை மீட்கும் வரை எமது போராட்டம் ஓயாது" என்று மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.


AthibAn Tv