“முஸ்லிம்களுக்கான 3.5% உள் ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்க” - மதுரை ஆட்சியரிடம் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அதிரடி மனு!
மதுரை: "இஸ்லாம் மதத்தில் சாதியோ, ஏற்றத்தாழ்வோ இல்லை எனும் போது இடஒதுக்கீடு கோருவது மதக் கோட்பாட்டிற்கு எதிரானது. எனவே, தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு:
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வேலூர் இப்ராஹிம் இன்று மனு அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:
"கடந்த திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காக குறிப்பிட்ட 7 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2024-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தற்போது ரத்து செய்துள்ளது. வேறு மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் 'பிசி - முஸ்லிம்' (BC-Muslim) சலுகையைப் பெற முடியாது என நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது."
"சாதி அடிப்படையில் சலுகை கோருவது இஸ்லாத்திற்கு எதிரானது"
"இஸ்லாம் மதத்தில் நம்பிக்கை அடிப்படையில் உயர்வு, தாழ்வோ அல்லது சாதியோ கிடையாது. பிறப்பின் அடிப்படையில் சாதி வேண்டாம் என்றுதான் பலரும் இஸ்லாத்திற்குள் வருகின்றனர். ஆனால், இங்கு வந்த பிறகும் சாதி உள்ளது என்றும், அதே சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்றும் நினைப்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானது. அப்படிச் செய்பவர்கள் தங்களை முஸ்லிம் என்று சொல்லும் தகுதியையே இழந்துவிடுகிறார்கள்.
திமுக அரசு 2024-ல் பிறப்பித்த அரசாணை என்பது சமூக நீதிக்கானது அல்ல, அது மதமாற்றத்தை ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது. இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற நோக்கில் மதம் மாறுவதை ஒருபோதும் வரவேற்க முடியாது; அதன் அடிப்படையிலான அரசாணையைத்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த உண்மை தெரியாமல், இஸ்லாமியர்களின் உரிமைகளை நீதிமன்றமும், மத்திய பாஜக அரசும் பறித்துவிட்டதாகச் சிலர் வீண் வதந்தி பரப்பி பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்" என வேலூர் இப்ராஹிம் சாடினார்.
தவெக அரசு மீது பாய்ச்சல் - அமைச்சர்களுக்குக் கண்டனம்:
அரசியலமைப்புச் சட்டத்தின்படி மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய தவெக அரசின் அமைச்சர்களைக் கடுமையாக விமரிசித்தார். "இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடே தேவை இல்லை என்கிற போது, இந்த இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனச் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கூறுவது முரண்பாடானது. வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களைத் திசைதிருப்ப வேண்டாம் என அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகச் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. அவருக்கு இஸ்லாமியச் சட்டங்கள் குறித்துப் புரிதல் இல்லை. மேல்முறையீடு என்ற பெயரில் இஸ்லாமியர்களை ஏமாற்ற தவெக அரசு முயற்சிக்கிறது" என்று கூறினார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - "தவெக அரசு பினாமி அரசு அல்ல"
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்துப் பேசிய அவர், "திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை இஸ்லாமிய மக்கள் தடுக்கவில்லை; வக்ஃபு வாரியம்தான் தடுத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது என்பது 2,000 ஆண்டுகள் பழமையான இந்துக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகும். வெறும் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வக்ஃபு வாரியம் இதனை அழிக்க முயல்வது எப்படிச் சரியாகும்?
முந்தைய திமுக அரசைப் போலவே, தற்போதைய தவெக அரசும் இந்துக்களின் புனித உணர்வுகளைத் துண்டாட முயல்கிறது. இந்த விவகாரத்தில் தவெக அரசு அரசியல் செய்யக் கூடாது. திமுக அரசின் 'பினாமி அரசாக' தவெக அரசு செயல்படக் கூடாது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற பாஜக என்றும் உறுதியாகப் போராடும்" என்று வேலூர் இப்ராஹிம் தனது பேட்டியில் மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.


AthibAn Tv