புனே 3 வயது சிறுமி வன்கொடுமை கொலை வழக்கு: 60 நாட்களில் 65 வயது முதியவருக்கு மரண தண்டனை
புனே: மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது முதியவருக்கு புனே சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நஸ்ராபூர் கிராமத்தைச் சேர்ந்த பீமராவ் காம்ப்ளே (65) என்ற அந்த முதியவர், கடந்த மே 1-ம் தேதி தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த சிறுமியை மாட்டுத் தொழுவத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் குற்றவாளியை அன்றே கைது செய்தனர். மேலும், வெறும் 16 நாட்களுக்குள் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வழக்கை விரைவாக நடத்தினர். இதன் பலனாக, குற்றம் நடந்த 60 நாட்களுக்குள் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், குற்றவாளியின் செயல் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கியது எனக் கூறி மரண தண்டனையை உறுதி செய்தது. சூழ்நிலை ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அரசுத் தரப்பு குற்றத்தை வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிவேக தீர்ப்பை வரவேற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும், வழக்கை மிகச் சிறப்பாகக் கையாண்ட புலனாய்வு அதிகாரிகளுக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

AthibAn Tv