விக்கிரமசிங்கபுரம் அருகே ஆடுகளை கடித்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேம்பையாபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டை வனப்பகுதியில் இருந்து இறங்கிய சிறுத்தை வேட்டையாடியது. இதேபோல் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது வீட்டிலும் சிறுத்தைப்புலி ஆட்டை கடித்து குதறியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, 'நெஸ்' என்ற மோப்ப நாய் மூலம் இரு பகுதிகளிலும் மோப்பம் பிடித்து சிறுத்தை வழியை பின்பற்றினர். அப்போது சிறுத்தையை பிடிக்க இரும்பு கூண்டு வைக்கும் இடத்தை தேர்வு செய்தனர்.
அதன்படி வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 2 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


AthibAn Tv