Type Here to Get Search Results !

இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என பிரதமர் மோடி

ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் ...

மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் குணமடைவோர் சதவீதம் 50 சதவீதம் ஆக உள்ளதாகவும், இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றனர்.

தமிழகம், மஹா., மே.வங்கம், டில்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்துகிறார். முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இது 6வது முறையாகும்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை இன்று உங்களிடம் இருந்து தெரிந்து கொள்வேன். உங்களின் ஆலோசனை, எதிர்காலத்தில் திட்டங்களை வகுப்பதற்கு பயனளிக்கும். கடந்த சில வாரங்களில் ஆயிரகணக்கான இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர். அனைத்து வகையான போக்குவரத்தும் துவங்கிய நிலையில், உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. குணமடைவோர் சதவீதம் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளது. கொரோனாவால், இந்தியாவில் உயிரிழப்பு வகிதமும் குறைவாக உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது.

தற்போதைய நிலையில் வெளியே வரும் போது மாஸ்க் அணியாமல் வருவது சரியாக இருக்காது. கைகளை கழுவதும், சானிடைசர்களை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். மார்க்கெட்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியே வர துவங்கியுள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடும்போது, அதனை எதிர்காலத்தில் ஆலோசிக்கும் போது, கூட்டாட்சியில் நாம் எப்படி இணைந்து செயல்பட்டோம் என்பது பற்றி நினைவு கூரப்படும்.

விவசாய பொருட்களின் விற்பனையில் சீர்திருத்தங்கள் செய்திருப்பதால், வேளாண் துறை வளர்ச்சி பெறும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயம், சிறுகுறு தொழில் உள்ளிட்ட துறைகளுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருந்தது.வர்த்தகம் மீண்டும் வேகம் அடைய நாம் அனைவரும் போராட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.