Type Here to Get Search Results !

அவதூறு பேச்சு: நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்கு



திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது. தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன.


விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, “எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினரான, சுதா நாராயணமூர்த்தி, தன் பதவியை ராஜினாமா செய்ததாக, முகநுாலில் தவறான செய்தி வெளியிட்ட நபர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், 'திருமலையில் மறைமுகமாக பல காரியங்கள் நடந்து வருகின்றன.அதனால், பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டாம்' என, ஒரு வீடியோ பதிவு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி, தமிழ்மாயன் என்றவர், தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தார். அதனடிப்படையில், தேவஸ்தானம் புகார் அளித்ததால், நடிகர் சிவகுமார் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, 'ஜூன், 30 வரை பக்தர்களுக்கு, திருமலையில் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது' என, சமூக வளைதளங்களில், மூன்று பேர் தவறான செய்தி வெளியிட்டனர்.

மேலும், 'திருமலை இதற்கு முன், புத்த விகாரமாக இருந்தது. தலைமுடி காணிக்கை என்பது, ஹிந்துக்களின் வழக்கம் அல்ல; பவுத்தர்கள் பழக்கம். 'திருமலையில் இருந்த புத்தர் சிலையை எடுத்து விட்டு, ஏழுமலையான் சிலை நிறுவப்பட்டுள்ளது' முகநுால் பக்கத்தில், மே, 7ல், ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இவை அனைத்தும், தேவஸ்தானத்தின் மீது, அவதுாறு பரப்ப சித்தரிக்கப்பட்டவை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், காவல் நிலையத்தில், தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது. அதனால், தவறான தகவல்கள் பரப்பிய அனைவர் மீதும், திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.