
துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யக் கோரி, புகார் அளித்த, ஆறு பேர், ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி, சட்டசபை செயலர் சீனிவாசன், கடிதம் அனுப்பி உள்ளார்.
முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்றதும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது, அவருக்கு எதிர் அணியில் இருந்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும், 10 எம்.எல்.ஏ.,க்கள், அதி.மு.க., அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர்.அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., கொறடா சக்கரபாணி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என, அறிவித்தது. அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.அப்போது, புகார்
தொடர்பாக, விசாரித்து வருவதாக, சபாநாயகரின் செயலர், நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சபாநாயகர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் எனக்கூறி, வழக்கை முடித்தது.இந்நிலையில், தி.மு.க., கொறடா சக்கரபாணி, சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, புதிய வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், புகார் கூறிய முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட ஆறு பேருக்கு, சட்டசபை செயலர் சீனிவாசன், கடிதம் எழுதி
உள்ளார்.அந்த கடிதத்தில், அவர்கள் அளித்த புகார் தொடர்பாக, ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.


AthibAn Tv