“எத்தனால் பெட்ரோலால் என்ஜின்கள் காலி; மைலேஜும் போச்சு” - மத்திய அரசின் E20 கொள்கைக்கு எதிராக டெல்லியில் வாகன ஓட்டிகள் விஸ்வரூப போராட்டம்!

Dina AthibAn
0

“எத்தனால் பெட்ரோலால் என்ஜின்கள் காலி; மைலேஜும் போச்சு” - மத்திய அரசின் E20 கொள்கைக்கு எதிராக டெல்லியில் வாகன ஓட்டிகள் விஸ்வரூப போராட்டம்!

புதுடெல்லி: மத்திய அரசு நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தி வரும் 'E20' பெட்ரோல் (20% எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள்) கொள்கைக்கு எதிராக, நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நுகர்வோர்களும் வாகன ஓட்டிகளும் திரண்டு நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நமது வாகனம், நமது உரிமை” (Our Vehicle, Our Right) என்ற அதிரடி முழக்கத்துடன், பிரபல தொழில்முனைவோரும் தொலைக்காட்சி ஆளுமையுமான தெஹ்சீன் பூனாவாலா மற்றும் அவரது 'டீம் பாரத்' (Team Bharat) அமைப்பு இணைந்து இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது.

E20 பெட்ரோலால் தங்களின் வாகனங்கள் சந்திக்கும் கடுமையான தொழில்நுட்பப் பாதிப்புகளைப் போராட்டக்களத்தில் நுகர்வோர்கள் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டனர்:

மைலேஜ் 22% சரிவு - நுகர்வோர்கள் குமுறல்:

போராட்டத்தில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சர்தக் என்பவர் பேசுகையில்:

"என்னுடைய 2018-ஆம் ஆண்டு மாடல் காரில் கடந்த சில மாதங்களாக E20 பெட்ரோல் பயன்படுத்திய பிறகு, காரின் மைலேஜ் லிட்டருக்கு 18 கி.மீட்டரிலிருந்து 14 கி.மீட்டராகக் குறைந்துவிட்டது. அதாவது, ஒரேடியாக 22% மைலேஜ் சரிவை நான் சந்தித்துள்ளேன். பெட்ரோல் விலை குறையவும் இல்லை, ஆனால் மைலேஜ் மட்டும் கொள்ளை போகிறது" என்றார்.

ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை பாக்கெட் கத்தரி:

  • என்ஜின் கோளாறு: ராஜ் சிங் என்ற கார் உரிமையாளர், கடந்த 7 மாதங்களாக E20 எரிபொருளைப் பயன்படுத்தியதால் தனது காரின் எரிபொருள் செலுத்தும் அமைப்பில் (Fuel injection system) கடுமையான கோளாறு ஏற்பட்டு, 'என்ஜின் வார்னிங் லைட்' எரிந்ததாகக் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த அமைப்பையும் சுத்தம் செய்து, பழுதடைந்த பாகங்களை மாற்ற அவருக்கு ரூ.35,000 செலவாகியுள்ளது.

  • சர்வீஸ் சென்டர்கள் திணறல்: முதித் அகர்வால் என்ற நுகர்வோர், தனது கார் நடுவழியில் திடீரென நின்றதாகவும், கார் பழுதுபார்க்கும் சேவை மைய ஊழியர்களிடம் விசாரித்தபோது, எத்தனால் கலப்பால் தினமும் 7 முதல் 8 கார்கள் இதே என்ஜின் புகாருடன் வருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டதை அம்பலப்படுத்தினார்.

  • ஃபில்டர் அடைப்பு: டீம் பாரத் அமைப்பைச் சேர்ந்த கார் பந்தய வீரர் ரத்தன் தில்லான் கூறுகையில், "எத்தனால் கலப்பால் காரின் எரிபொருள் ஃபில்டர்கள் மற்றும் பைப்லைன்கள் வேகமாக அடைத்துக் கொள்கின்றன. சாதாரண நடுத்தர கார்களின் ஃபில்டரை மாற்றவே ரூ.25,000 முதல் ரூ.80,000 வரை செலவாகிறது. அதுமட்டுமன்றி, மலைப்பகுதிகளில் நிலவும் கடுமையான குளிரில் காரை ஸ்டார்ட் செய்வது பெரும் சவாலாக மாறியுள்ளது" என்றார்.

“பெட்ரோலில் தண்ணீர் கலக்கிறது” - ஆபத்தான பின்னணி:

எத்தனால் (Ethanol) வேதியியல் ரீதியாகக் காற்றில் உள்ள ஈரப்பதத்தை (Moisture) மிக வேகமாகத் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டது. இதுகுறித்துச் சிவ்பட் என்ற வாகன ஓட்டி பேசுகையில், "இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் உள்ள நிலத்தடிச் சேமிப்புத் தொட்டிகள் E20 பெட்ரோலைச் சேமிக்கும் நவீனத் தரம் கொண்டவையாக இல்லை. இதனால் காற்றில் உள்ள ஈரப்பதம் எத்தனாலுடன் கலந்து, எரிபொருளுக்குள் தண்ணீர் உருவாகிறது. இந்தத் தண்ணீர் என்ஜினுக்குள் செல்வதால், கார்கள் மிகக் குறுகிய காலத்திலேயே 'ஸ்கிரேப்' (Scrap) நிலைக்குத் தள்ளப்படுகின்றன" என்று சாடினார்.

“சர்க்கரை ஆலை லாபிக்காக நடுத்தர வர்க்கம் பலி”:

மத்திய நிதின் கட்கரியின் இந்த எத்தனால் கொள்கை, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் மற்றும் கார்ப்பரேட் லாபி இருப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

குறிப்பாக, இந்த எத்தனால் உற்பத்தியில் கொழிக்கும் உத்தரப் பிரதேசத்தின் 155-க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் மற்றும் மகாராஷ்டிராவின் 195-க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளின் அரசியல் செல்வாக்குமிக்க 'சர்க்கரை ஆலை லாபி' (Sugar lobby) பெரும் லாபம் ஈட்டுவதற்காகவே, இந்தியாவின் நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் பலியாக்கப்படுவதாக அவர்கள் பகிரங்கமாகச் சாடினர்.

மறுப்பு மற்றும் செய்திப் பின்னணி: நுகர்வோர் மத்தியில் இத்தகைய கடுமையான கொந்தளிப்பும் போராட்டமும் வெடித்துள்ள போதிலும், இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மத்திய எரிசக்தித் துறை நிபுணர்கள் குழு (Expert Committee), "எத்தனால் கலந்த எரிபொருளால் புதிய ரக பிஎஸ்-6 (BS6 Phase 2) வாகனங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை" என்று மத்திய அரசின் முடிவை அண்மையில் வலுவாக ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் பழைய வாகனங்களின் பாதுகாப்பு குறித்து நுகர்வோர் மத்தியில் இன்னமும் அச்சம் நீடிக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!