டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு: உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு; இன்று அவசர ஆலோசனை!
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை (Bar) உடனடியாக மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் திடீர் உத்தரவுக்குப் பார் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குநருடன் இன்று மீண்டும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 4,000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் சூழலில், அவற்றில் 2,700 கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. இவற்றுக்கான டெண்டர் கடந்த 2023-ஆம் ஆண்டு விடப்பட்டு, அதன் ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் காரணமாகப் புதிய டெண்டர் விடப்படாமல், பழைய ஒப்பந்தமே மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அந்த நீட்டிப்புக் காலமும் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
1 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு: உரிமையாளர்கள் வேதனை
ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பார்களை நவீன முறையில் வடிவமைக்கவும், டெண்டர் நடைமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரவும் திட்டமிட்ட டாஸ்மாக் நிர்வாகம், இடைப்பட்ட காலத்திற்காக ஒப்பந்தத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க முதலில் முடிவு செய்திருந்தது. இதுகுறித்து பார் உரிமையாளர்களிடமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து பார்களையும் உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தத் திடீர் உத்தரவால் அதிர்ச்சியடைந்த பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரைச் சந்தித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பார்களை மூடினால், இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள சுமார் 1 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இந்த மூடல் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொது இடங்களில் மது அருந்தினால் கைது: அரசு எச்சரிக்கை!
இதன் பின்னணியில், புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிடுவதா அல்லது பார்களுக்குக் கால நீட்டிப்பு வழங்குவதா என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும், உயர் அதிகாரிகளும் இன்று பார் உரிமையாளர்களுடன் ஆலோசிக்க உள்ளனர். இக்கூட்டத்தின் முடிவுகள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, பார்கள் மூடப்படுவதால் குடிகாரர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்கத் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. "பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கக் காவல் துறை மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். விதியை மீறி சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.


AthibAn Tv