Type Here to Get Search Results !

“அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது!”: புதுச்சேரியில் சபாநாயகர் தேர்தல் நடத்தக் கோரி திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா போராட்டம்



“அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது!”: புதுச்சேரியில் சபாநாயகர் தேர்தல் நடத்தக் கோரி திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைச்சர்களுக்கு இதுவரை இலாகாக்கள் ஒதுக்கப்படாததை கண்டித்தும் திமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் அதிரடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, முதல்கட்டமாக மே 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். அதன்பின்னர், ஒரு மாத கால இழுபறிக்குப் பிறகு ஜூன் 17-ம் தேதி மீதமுள்ள 3 அமைச்சர்களான ராஜவேலு, சிவகொழுந்து, ராஜசேகரன் ஆகியோர் பதவியேற்றனர். இருப்பினும், அமைச்சர்கள் பதவியேற்று பல நாட்களாகியும் அவர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படாததால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் ஸ்தம்பித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பேரவைத் தலைவர் பதவி மற்றும் முக்கிய இலாகாக்களைக் கைப்பற்றுவதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே நிலவி வரும் கடுமையான அதிகாரப் போட்டியே இந்த இழுபறிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பேரவைத் தலைவர் தேர்தலை ஜூலை 2-ம் தேதி நடத்தத் திட்டமிட்டு ஆளுநர் கைலாஷ்நாதனுக்குக் கோப்பு அனுப்பப்பட்ட போதிலும், அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், பேரவைத் தலைவர் தேர்தல் தள்ளிப்போவதால் சட்டப்பேரவைக் கூட்டத்தையும் நடத்த முடியாத முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிர்வாகச் சீர்குலைவைக் கண்டித்து, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், செந்தில் ஆகியோர் கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி, சட்டப்பேரவை மைய மண்டபப் படிகளில் அமர்ந்து அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், "ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தும்கூட, மிகச் சிறிய மாநிலமான புதுச்சேரியில் மட்டும் இதுவரை சட்டமன்றக் கூட்டம் கூட்டப்படாமலும், நிரந்தர சபாநாயகர் நியமிக்கப்படாமலும் இருப்பது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையின் பாதுகாவலரான சபாநாயகரை நியமிக்கக் கோருவது எங்களின் உரிமை; இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, டீக்கடை பிரச்சாரமாக மாறியுள்ளது. மேலும், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாததால் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' கதையாகத் துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. பேரவைத் தலைவர் பதவியைப் பொறுத்தவரை அதிக இடங்களில் வென்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முதல்வர் ரங்கசாமி கேட்பதில் நியாயம் உள்ளது, ஆனால் குறைந்த இடங்களில் வென்ற பாஜக அந்தப் பதவியைக் கேட்பது முறையல்ல. ஆளுநரும், முதல்வரும் உடனடியாகத் தலையிட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.