"கோயில் முறைகேடுகள் குறித்து நேரடியாக எனக்கு மின்னஞ்சலில் புகார் தரலாம்" - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு!
சென்னை: "தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், லஞ்ச ஊழல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் நேரடியாகத் தனது அதிகாரப்பூர்வ அரசு மின்னஞ்சல் முகவரிக்கு ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அதிரடியாக அறிவித்துள்ளார். தவெக ஆட்சியில் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆன்மீகத் தலங்களிலும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு, லஞ்ச ஒழிப்பில் அவர் காட்டி வரும் வேகம் ஆன்மீகப் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமைச்சர் ரமேஷ் சமீபத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது, விஐபி (VIP) தரிசனத்திற்காக அமைச்சரிடமே அங்கிருந்த ஊழியர்கள் ரூ.4,000 லஞ்சம் வாங்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது உடனடியாக அமைச்சர் துறை ரீதியான அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதேபோல, பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில், திருநெல்வேலி காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் எனப் பல ஆன்மீகத் தலங்களிலும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தித் தூய்மையான நிர்வாகத்தை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, துறை சார்ந்த புகார்களைப் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றித் தெரிவிக்க அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: "இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோயில்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தாலோ, தரிசனத்திற்குச் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தாலோ அல்லது கோயில் திருப்பணிகள் மற்றும் கோயில் தொடர்பான வேலைவாய்ப்புகளுக்கு யாராவது லஞ்சம் கோரினாலோ, பொதுமக்கள் அதுகுறித்த புகார்களை minister_hrce@tn.gov.in என்ற எனது பிரத்யேக மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "பொதுமக்கள் தங்களின் புகார்களை அனுப்பும்போது, அதற்கேற்ற தகுந்த விளக்கங்கள் மற்றும் நம்பகமான ஆதாரங்களுடன் (புகைப்படம் அல்லது வீடியோக்கள்) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளை நானும், எனது அமைச்சக அலுவலகமும் நேரடியாகக் கண்காணித்து மேற்கொள்வோம்" என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக, தவெக அரசின் பொதுப்பணித் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, தனது துறை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கத் தனியாருக்குச் சொந்தமான 'ஜி-மெயில்' (Gmail) முகவரியை வெளியிட்டிருந்தார். அரசுத் துறைப் புகார்களுக்குத் தனியார் நிறுவன மின்னஞ்சலைப் பயன்படுத்துவது முறையல்ல என்று அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில், அதற்கு முற்றிலும் மாறாக, அமைச்சர் ரமேஷ் தற்போது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அதிகாரப்பூர்வ அரசு டொமைனில் (gov.in) உருவாக்கப்பட்ட இ-மெயில் முகவரியைப் பொதுமக்களுக்கு வழங்கியிருப்பது பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


AthibAn Tv