Type Here to Get Search Results !

இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி: "தலைமையே இயக்கத்தைப் பார்க்கவில்லை" – அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிரடி விலகல்!


இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி: "தலைமையே இயக்கத்தைப் பார்க்கவில்லை" – அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிரடி விலகல்!

திருப்பூர்:

அதிமுக-வில் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்துப் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், கட்சியின் முக்கிய முகமும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பைக் கடுமையாக விமர்சித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, திருப்பூர் மற்றும் கொங்கு மண்டல அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ-க்கள் கூட்டாகக் கடிதம் எழுதிய பரபரப்பு அடங்குவதற்குள், பல்லடம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கட்சியை விட்டே விலகுவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"ஜெயலலிதா என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்; இபிஎஸ் காரணம் இல்லாமல் நீக்கினார்"

எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெளியிட்டுள்ள அந்த உருக்கமான மற்றும் காரசாரமான அறிக்கையின் விவரம் வருமாறு:

"அதிமுக என்பது என்னுடைய வாழ்க்கையில் எல்லாவிதமான ஏற்றத்திற்கும் காரணமாக இருந்த இயக்கமாகும். எளிய தொண்டனாகக் கடந்த 1980-ம் ஆண்டில் கட்சியில் இணைந்து, கிளைக் கழகச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை அனைத்துப் பொறுப்புகளையும் வகித்துள்ளேன். எனக்கு 2011-ல் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் என உயரிய பொறுப்புகளைக் கொடுத்து அழகு பார்த்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் 22 மாவட்டச் செயலாளர்களை அம்மா அவர்கள் மாற்றியபோதும், என்னை மாற்றவில்லை. அது அவர் என் மீது வைத்திருந்த மாபெரும் நம்பிக்கைக்குச் சான்றாகும்.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு எந்தவிதமான காரணமும் இல்லாமல், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் நீக்கப்பட்ட போதும், தலைமைக்கு விசுவாசமாகவே பணியாற்றி வந்தேன். அதன் தொடர்ச்சியாக, 2021-ம் ஆண்டு தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு கழகத்தினரின் மேலான உழைப்பால் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றேன்."

"தலைமையைக் காப்பதே குறிக்கோள்; எதிர்க்கருத்து சொன்னால் துரோகி பட்டம்" - இபிஎஸ் மீது சாடல்!

தற்போதைய தலைமையின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அவர், "2026-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோதுதான், திருப்பூர் மாவட்ட கழகத்தின் உண்மை நிலையும், நம்மை வளர்த்த இயக்கம் கரைந்து கொண்டிருப்பதும் எனக்குத் தெரியவந்தது. தலைமையின் மீது சந்தேகம் வராத வரையில்தான் ஒரு இயக்கத்தில் தொண்டனால் சிறப்பாக இயங்க முடியும்.

ஆனால், இன்றோ அதிமுக தலைமையே இயக்கத்தைப் பார்க்காமல், தங்களை மட்டுமே காத்துக்கொள்வதில் முழு அக்கறை காட்டுகிறது. கட்சியில் உண்மையான எதிர்க்கருத்து சொல்பவர்களை எல்லாம் 'துரோகி' பட்டம் சூட்டி வெளியே அனுப்ப, தலைமையுடன் ஒரு சுயநலக் கூட்டம் கூட்டுச் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று மாற்று கட்சிகள் அனைத்தும் அதிமுகவினரை அரவணைக்கத் தயாராக இருக்கும் வேளையில், அதிமுகவின் தலைமையோ சொந்தக் கட்சி நிர்வாகிகளை நீக்குவதில்தான் முழுக் கவனம் செலுத்துகிறது.

எனவே, நீண்ட யோசனைக்குப் பின்னரே அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன். இதற்கு மேல் எனக்கு யாரும் துரோகி பட்டம் சூட்ட முற்பட வேண்டாம்" என்று தனது அறிக்கையில் பொங்கியுள்ளார்.

ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக-வுக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள சூழலில், எம்.எஸ்.எம்.ஆனந்தனின் இந்த அதிரடி விலகல் முடிவு, திருப்பூர் மாவட்ட அதிமுக-வை நிலைகுலையச் செய்துள்ளது. மாற்று அணியினர் இவரைத் தங்கள் பக்கம் இழுக்க இப்போதே காய் நகர்த்தத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.