“இந்தியாவில் இருந்திருந்தால் சிஇஓ ஆகியிருக்க முடியாது” - பெப்சிகோ முன்னாள் தலைவர் இந்திரா நூயி கருத்தால் வெடித்தது சர்ச்சை!
நியூயார்க்: அமெரிக்காவைத் தவிர இந்தியா உள்ளிட்ட உலகின் வேறு எந்த நாட்டிலும் தம்மால் ஒரு பெரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆகியிருக்க முடியாது என்று பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான இந்திரா நூயி கூறியிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்திரா நூயி பங்கேற்றுப் பேசினார். அப்போது, அமெரிக்கா தன்போன்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கிய வாய்ப்புகள் குறித்துப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசுகையில், "இந்தியா உட்பட உலகின் வேறு எந்த நாட்டிலும் என்னால் ஒரு நிறுவனத்தின் சிஇஓ நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. ஏனெனில், ஒருவருடைய தகுதிக்கு (Meritocracy) மட்டுமே முக்கியத்துவம் அளிப்பது அமெரிக்காவின் தனித்துவமான நடைமுறையாக உள்ளது. இங்குள்ள வழிகாட்டிகள் நீங்கள் ஆணா, பெண்ணா, எந்த இனத்தைச் சேர்ந்தவர் அல்லது என்ன பாலினம் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். சிறந்த சிந்தனையும் திறமையும் உள்ளவர்கள் மட்டுமே உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்" என்று குறிப்பிட்டார். மேலும், குடியேறியவர்களுக்கு அமெரிக்கா வழங்கும் வாய்ப்புகள் உலகில் வேறு எங்கும் கிடைக்காதவை என்றும், உலகின் மிகச்சிறந்த நாடு அமெரிக்கா என்றும் அவர் புகழ்ந்துரைத்தார்.
சமூக ஊடகங்களில் வெடித்த விவாதம்: இந்திரா நூயியின் இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகித் தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இவருடைய இந்த விவாதப் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையவாசிகள் இருதரப்பாகப் பிரிந்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
நூயியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், "இந்தியாவின் தற்போதைய அசுர வளர்ச்சி மற்றும் இங்கு தகுதி அடிப்படையில் வழங்கப்படும் உலகளாவிய வாய்ப்புகளை இந்திரா நூயி அநியாயமாக நிராகரித்துவிட்டார்" என்று குற்றம் சாட்டுகின்றனர். மறுபுறம், அவருக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், "இந்திய கார்ப்பரேட் துறையில் இன்றும் நீடித்து வரும் கட்டமைப்பு ரீதியான தடைகள் மற்றும் பாலினப் பாகுபாடுகள் குறித்த சங்கடமான உண்மைகளையே இவரது கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன" என்று வாதிட்டு வருகின்றனர்.

AthibAn Tv