"நெல் கொள்முதல் புகார்களுக்கு உடனே தீர்வு" — நேரடி கொள்முதல் நிலையங்களில் உதவி எண்களைக் காட்சிப்படுத்த உணவுத் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நெல் கொள்முதல் தொடர்பான தங்களது புகார்களை எவ்வித சிரமமுமின்றித் தெரிவிப்பதற்காக, அனைத்து நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகங்கள் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்களில் (DPCs) உதவி மைய எண்களைப் பொதுமக்கள் அறியும் வகையில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று உணவுத் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமை அலுவலகத்தில் திடீர் ஆய்வு: சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) தலைமை அலுவலகத்திற்கு நேற்று நேரில் சென்ற உணவுத் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், அங்குள்ள பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் நிலையங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகங்கள் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்குகள் (Godowns) ஆகிய அனைத்து இடங்களிலும் புகார் எண்களைப் பெரிய பலகைகளில் எழுதி, அனைவரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கட்டணமில்லா எண் மற்றும் வாட்ஸ்-அப் எண்கள் ஆய்வு: விவசாயிகளின் பயன்பாட்டிற்காகத் தற்போது நடைமுறையில் உள்ள முக்கியப் புகார் எண்கள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை அமைச்சர் இந்த ஆய்வின் போது தனிப்பட்ட முறையில் சரிபார்த்தார். அதன்படி, கீழே குறிப்பிட்டுள்ள எண்கள் தடையின்றிச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்குக் உத்தரவிட்டார்:
கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll-Free): 1800 599 3540
அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் எண் (WhatsApp): 95008 02465
விவசாயிகள் நெல் கொள்முதலில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது தாமதங்களைச் சந்தித்தால், இந்த எண்களைத் தாராளமாகத் தொடர்புகொண்டு தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு விதிப்பு: தொடர்ந்து, நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் தற்போது தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்று வரும் பல்வேறு நவீனச் சீரமைப்புப் பணிகளையும் அமைச்சர் ப.வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் அனைத்தையும் தரக் கட்டுப்பாட்டுடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் (Deadline) விரைந்து முடித்துத் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் கறாரான அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.


AthibAn Tv