தம்பி குடும்பத்தைத் தாக்கிய கொலை முயற்சி வழக்கு: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!
புதுச்சேரி: தனது சொந்தத் தம்பி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை வெறியுடன் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையை (Charge Sheet) நேரில் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூலை 4) புதுச்சேரி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ச்சியாக நீதிமன்ற வாய்தாக்களுக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில்தான், அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் இந்த இறுதிக்கட்ட கறார் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகர் பகுதியில், தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் தம்பி மரிய குளோத் வசித்து வருகிறார். அமைச்சருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி, அமைச்சர் மரிய வில்சன் தனது தம்பியின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து, தம்பி மரிய குளோத் மற்றும் அவரது மனைவி கேர்லைன் கிளேட் (41) ஆகியோரைத் கொடூரமாகத் தாக்கியதாகப் புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அமைச்சரின் சகோதரர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, அத்துமீறி நுழைதல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 கடுமையான பிரிவுகளின் கீழ் (IPC 448, 427, 324, 294(b), 506(i), 34) போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான கொலை முயற்சி வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்ப்பதற்காக அமைச்சர் மரிய வில்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விசாரணைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், தாக்குதல் சம்பவத்தை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரின் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆதாரமாகச் சேகரித்த லாஸ்பேட்டை போலீஸார், அண்மையில் நடந்த தேர்தலுக்குப் பிறகு நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
முன்னதாக, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் தவெக (TVK) வேட்பாளராக மரிய வில்சன் அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், அவர் உருட்டுக்கட்டையுடன் தனது தம்பி வீட்டில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது அவர் தமிழக நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தச் சூழலில், அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் நீதிமன்ற ஆஜராவதைத் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த நிலையில், "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை நேரில் ஆஜராகிப் பெற்றே தீர வேண்டும்; அதற்கு இன்று (ஜூலை 4) புதுச்சேரி ஜே.எம்.1 (JM 1) நீதிமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் கட்டாயம் ஆஜராக வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தமிழக மற்றும் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


AthibAn Tv