மெகா ‘இழுப்பு மேளா’வுக்கு தயாராகும் தவெக: ‘பனையூர் பந்திக்கு’ கிளம்பும் இலை கட்சி முக்கியப் புள்ளிகள்!
உள்குத்து உளவாளி: தமிழக அரசியல் களத்தில் ‘இலை’ கட்சியை உலுக்கும் வகையில், அக்கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களைத் தன் பக்கம் இழுக்க ஆளும் தரப்புடன் இணைந்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) திரைமறைவில் மெகா பிளான் ஒன்றை அரங்கேற்றி வருகிறது. வரும் ஜூலை 2-ஆம் தேதி இதற்கான மெகா ‘இழுப்பு மேளா’ நடத்தப்பட உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
இழுப்புப் பட்டியலில் ‘மதியான’ மாண்புமிகுவும் ‘ரிவர்’ மைந்தரும்!
இலை கட்சியில் இருந்து சுமார் 10 எம்.எல்.ஏ-க்கள் வரை இழுத்துப் போடும் திட்டத்தில் ஆளும் தரப்பு மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே பேசி முடிக்கப்பட்ட நபர்களைத் தவிர, இலை கட்சியின் மாதர் அணியை வழிநடத்திய ‘மதியான’ முன்னாள் பெண் அமைச்சரும், மற்றொரு முன்னாள் மாண்புமிகுவான ‘ரிவர் மைந்தரும்’ தற்போதைய இழுப்புப் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளனர்.
இவர்களோடு சேர்த்து ‘புரம்’ மாவட்டத்தின் புரட்சி ‘முகம்’ என்று அழைக்கப்படும் முக்கியத் தலைவரும், அவரது முழு ஆதரவு பெற்ற ‘ராகமான’ தற்போதைய எம்.எல்.ஏ ஒருவரும் இந்தக் குதிரை பேரப் பட்டியலில் ஐக்கியமாகியுள்ளனர்.
‘பனையூர் பந்திக்கு’ பம்பரமாய் சுழலும் கொங்கு ‘மணி’!
கொங்கு மண்டல அதிர்வு: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ‘மணியான’ முன்னாள் மாண்புமிகு ஒருவரும், தனது ஆதரவாளர் பட்டாளத்துடன் இந்த ‘இழுப்பு மேளாவில்’ இன்முகம் காட்ட முழுச் சம்மதம் தெரிவித்துள்ளதாகப் பனையூர் வட்டாரங்கள் கசியவிட்டுள்ளன.
தற்போது தவெக-வின் முக்கிய மையமாகப் பார்க்கப்படும் ‘பனையூர் பந்திக்கு’ (தவெக தலைமை அலுவலகம்) தங்களோடு சேர்த்து இன்னும் சில எம்.எல்.ஏ-க்களையும், மாவட்டப் பொறுப்பாளர்களையும் கூட்டிச் செல்ல இந்த முக்கியத் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று வேலை செய்து வருகின்றனர்.
இன்று அல்லது நாளை சபாநாயகரிடம் ராஜினாமா?
‘பனையூர் பந்திக்கு’ முழுமையாகத் தயாராகிவிட்ட இலை கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதங்களைக் கைப்பட எழுதிக் கொண்டு, இன்று அல்லது நாளைக்குள் சபாநாயகரை நேரில் சந்தித்துச் சமர்ப்பிக்கக் கூடும் என்று கோட்டை வட்டார ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2026-ன் இந்த அதிரடித் திருப்பம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.


AthibAn Tv