"திமுக எம்.எல்.ஏ-க்களை விலக வைக்க விஜய் - வைகோ கூட்டுச் சதி!" – ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அதிரடிப் புகார்; தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!
சென்னை:
தமிழகத்தில் ஆளும் தவெக அரசுக்குச் சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாததால், திமுக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் மூலம் பதவி விலகச் செய்ய முதல்வர் விஜய் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகத் திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் வைகோ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் திமுக அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள இந்த அதிரடிப் புகார் மனுவில், தமிழக அரசியல் வட்டாரத்தை உலுக்கும் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வைகோவின் பொதுக்குழு பேச்சு தான் ஆதாரம் – ஆர்.எஸ்.பாரதி புகாரில் விபரம்:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள அந்தப் புகார் மனுவின் விவரம் வருமாறு:
"கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரனும், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வனும் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சட்டப்படி அவர்கள் இருவரும் திமுக கொறடா (Whip) உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
இந்நிலையில், ஜூன் 27 அன்று சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, 'முதல்வர் விஜய் தனது பட்டினப்பாக்கம் இல்லத்தில், இந்த 2 திமுக எம்.எல்.ஏ-க்களையும் குதிரை பேரம் மூலம் பதவி விலகச் செய்யுமாறு தன்னிடம் கோரினார்' எனப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அவர்களுக்குத் தவெக முழு ஆதரவளிக்கும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்ததாகவும் வைகோ பேசியுள்ளார்.
கூட்டுச் சதியாளர்களில் ஒருவரான வைகோவின் இந்த வாக்குமூலம், முதல்வர் விஜய் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, குதிரை பேரத்தில் நேரடியாக ஈடுபட்டதை அம்பலப்படுத்துகிறது. இதுதொடர்பான வைகோவின் காணொளிப் (Video) பதிவுகளும் இப்புகாரோடு இணைக்கப்பட்டுள்ளன."
"பெரும்பான்மை இல்லாத தவெக அரசு; அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவிலும் சந்தேகம்"
மேலும் அந்தப் புகாரில், "தற்போது 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ள தவெக அரசுக்குச் சட்டப்பேரவையில் முழுமையான பெரும்பான்மை இல்லை. எனவே, வரவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும், எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே, அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், எஸ்.ஜெயகுமார், பி.சத்யாபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்துப் பதவி விலகத் தூண்டப்பட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் புனிதத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில், இந்த ராஜினாமாக்கள் பண பலத்தாலோ அல்லது அதிகாரத் துஷ்பிரயோகத்தாலோ நிகழ்ந்துள்ளனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
"முதல்வராக இருந்தாலும் FIR கட்டாயம்" - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காண்பிப்பு:
'லலிதா குமாரி விஷ்ணு எதிர் உத்தரப்பிரதேச அரசு' வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக, "ஒரு அறியத்தக்க குற்றம் (Cognizable Offence) நடந்துள்ளதாகப் புகார் வரும்போது, சம்பந்தப்பட்ட நபர் முதல்வராகவே இருந்தாலும் முதற்தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வது சட்டப்படி கட்டாயமாகும். சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினால் அது ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைத் தகர்த்துவிடும்.
எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, முதல்வர் விஜய் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (லஞ்ச ஒழிப்புத்துறை) மூலமாக வழக்குப் பதிவு செய்து, நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக-வின் இந்த அதிரடி சட்டப் போராட்ட நடவடிக்கை காரணமாக, தவெக - திமுக இடையே அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.


AthibAn Tv