இ-ரிக்ஷா பேட்டரிகளை முடக்கும் ஆபத்தான சீன செயலிகள்: கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
புதுடெல்லி: இ-ரிக்ஷா (E-Rickshaw) மற்றும் இதர மின்சார வாகனங்களின் பேட்டரிகளை ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் தூரத்திலிருந்தே முடக்கும் (Shutdown) ஆபத்தான 7 செயலிகளை தங்களது ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த செயலிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்த அதிரடி நோட்டீஸை அனுப்பியுள்ளது.
அரசு சுட்டிக்காட்டியுள்ள 3 முக்கிய காரணங்கள்: இந்தச் செயலிகளைத் தடை செய்யக் கோரி கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் தளங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் அரசு மூன்று முக்கியக் காரணங்களை முன்வைத்துள்ளது:
பேட்டரியைச் செயலிழக்கச் செய்தல்: இந்தச் செயலிகளைத் தவறான வழியில் பயன்படுத்தி, ஓடிக்கொண்டிருக்கும் இ-ரிக்ஷா மற்றும் இதர மின்சார வாகனங்களின் பேட்டரிகளை திடீரெனச் செயலிழக்கச் செய்வது.
வாகன பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சாலையில் வாகனம் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஏற்படும் விபத்து மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்.
பொதுமக்களுக்குத் தடங்கல்: அத்தியாவசியப் போக்குவரத்துச் சேவையில் திட்டமிட்டுச் செய்யப்படும் இடையூறுகள்.
மத்திய அரசின் இந்த அதிரடிப் பட்டியலில் BAT-BMS, SMART BMS, LOSSIGY உள்ளிட்ட 7 முக்கியச் செயலிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கூறுகையில், "ஏற்கனவே இ-ரிக்ஷா பேட்டரிகளை முடக்கும் இரண்டு செயலிகள் குறித்துக் கண்டறியப்பட்டு, அவை ஆப் ஸ்டோரிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளன. பொதுப் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற செயலிகளை ஆப் ஸ்டோர்கள் தாங்களாகவே முன்வந்து கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆபத்தான பின்னணி என்ன? டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இ-ரிக்ஷாக்களை நம்பியுள்ளனர். பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இந்த வாகனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், சீனாவில் தயாரிக்கப்பட்ட சில விலை குறைவான லித்தியம் பேட்டரிகளில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததைச் சில சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த மலிவான லித்தியம் பேட்டரிகளில் உள்ள ப்ளூடூத் செயல்பாட்டை, சீனாவிலிருந்து இயங்கும் ‘BAT-BMS’ போன்ற செயலிகள் மூலம் 10 முதல் 15 மீட்டர் தூரத்தில் இருந்தபடியே பிறரால் கட்டுப்படுத்த முடிகிறது. இச்செயலியில் உள்ள ‘டிஸ்சார்ஜ் சுவிட்ச்’ (Discharge Switch) மற்றும் ‘சார்ஜ் சுவிட்ச்’ (Charge Switch) ஆகிய ஆப்ஷன்களைப் பயன்படுத்தி, ஓடிக்கொண்டிருக்கும் இ-ரிக்ஷாக்களின் மோட்டாருக்குச் செல்லும் மின்சாரத்தைத் தூரத்திலிருந்தே துண்டித்து வாகனத்தை அப்படியே நிறுத்திவிடுகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பரவிய விபரீத டிரெண்ட்: சிலர் இதனை வேடிக்கைக்காகத் தொடங்கி, தற்போது இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சமூக வலைத்தள கன்டென்ட் கிரியேட்டர்கள் சிலர், நடுரோட்டில் ஓடும் இ-ரிக்ஷாக்களைத் தூரத்திலிருந்து மொபைல் மூலம் நிறுத்தி, அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். குறிப்பாக ‘Tirris’ மற்றும் ‘Tirri Remote Control’ ஆகிய ஹேஷ்டேக்குகளின் கீழ் (Tags) இந்த விபரீத வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் இந்த ஆபத்தான விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவே மத்திய அரசு தற்போது இந்த அதிரடித் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


AthibAn Tv