“மேகேதாட்டுவில் ரகசியமாகத் தொடங்கும் அணைப் பணிகள்” - படிக்கட்டுகள், இரும்புக் கம்பிகளை நேரில் பார்த்து பி.ஆர்.பாண்டியன் அதிர்ச்சித் தகவல்!
ஓசூர்: "கர்நாடக மாநிலம் மேகேதாட்டு பகுதியில் தமிழக எல்லையை ஒட்டி அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு, இரும்பு கம்பிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் ரகசியமாகத் தொடங்கியிருப்பது களஆய்வில் உறுதியாகியுள்ளது" என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஓசூரில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதிக்கு உட்பட்ட மேகேதாட்டு அணை அமைய உள்ள பகுதிக்குத் தனது குழுவினருடன் இன்று (ஜூலை 5, 2026) நேரில் சென்று ரகசியமாகப் பார்வையிட்டுத் திரும்பிய பி.ஆர்.பாண்டியன், ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சி விவரங்கள் வருமாறு:
மேகேதாட்டுவில் நடப்பது என்ன? - நேரடி கள நிலவரம்:
காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் ஒன்றாக இணையும் 'சங்கமம்' பகுதியிலிருந்து தமிழகம் நோக்கி காவிரி ஆறு பாயும் 3-ஆவது கிலோமீட்டரில் உள்ள மேகேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள புதிய ஏற்பாடுகளைப் பி.ஆர்.பாண்டியன் பட்டியலிட்டார்:
"இரு உயர்ந்த மலைக்குன்றுகளுக்கு இடையே காவிரி நுழையும் மிகக் குறுகிய இடத்தில்தான் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது, மலையடிவாரச் சாலையிலிருந்து சுமார் 150 அடி ஆழத்தில் உள்ள ஆற்றின் தரைமட்டத்திற்கு அதிகாரிகள் தடையின்றிச் சென்று வரப் புதிதாகப் சிமெண்ட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, அணை கட்டுவதற்கான துல்லியமான அளவீடுகள் (Survey markings) செய்யப்பட்டு, ஆற்றின் தரைமட்டக் கருங்கல் பாறைகளில் தடிமனான இரும்பு கம்பிகள் பலமாக நடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அங்கு அணை கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதற்கான அசைக்க முடியாத அடையாளங்கள் ஆகும்."
கட்டுமானத்தை மறைக்க 'சுற்றுலா' நாடகம்:
ஏற்கனவே அடர்ந்த வனப்பகுதியாகவும், யானை மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆபத்தான இடமாகவும் இருந்ததால் மேகேதாட்டு பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல கர்நாடக வனத்துறை கடுமையான தடை விதித்திருந்தது.
ஆனால், தற்போது அங்கு அணை கட்டுவதற்காகப் போடப்படும் சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளை நியாயப்படுத்தும் நோக்கில், அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்ல கர்நாடக அரசு திடீரென அனுமதி வழங்கியுள்ளது. இதற்காகச் சங்கமம் பகுதியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் (Special buses) மூலம் மக்களை மேகேதாட்டு வரை கர்நாடக அரசு அழைத்துச் சென்று வருகிறது. இதன் மூலம் அணை கட்ட தாங்கள் முழு வீச்சில் தயாராக உள்ளதை கர்நாடக அரசு வெளிப்படுத்தியுள்ளது என்று பி.ஆர்.பாண்டியன் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் கோரிக்கை:
மத்திய அரசுக்குக் கெடு: மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளமும் அழியும் என்பதால், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு இந்த அணை கட்டுமானத்தை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்.
பிரதமருக்குக் கோரிக்கை: மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைப் பாதுகாக்கத் தொடர்புடைய மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, பிரதமர் தலைமையில் ஒரு 'உயர் மட்டப் பாதுகாப்பு குழு' (Western Ghats Protection Committee) அமைக்கப்பட வேண்டும்.
காங்கிரஸிற்குச் சவால்: "சென்னையில் சொகுசாக அமர்ந்துகொண்டு 'காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்' என வீரவசனம் பேசும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஏசி அறையை விட்டு வெளியே வந்து மேகேதாட்டு எல்லையில் கர்நாடகா இரும்பு கம்பிகளை நட்டிருப்பதை நேரில் வந்து பார்க்க வேண்டும்" எனப் பி.ஆர்.பாண்டியன் சாடினார்.
இந்த அதிரடி களஆய்வின் போது விவசாய சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் ஓசூர் நடராஜன் மற்றும் திருவாரூர் மாவட்ட துணைச்செயலாளர் முகேஷ் ஆகியோர் பி.ஆர்.பாண்டியனுடன் உடனிருந்தனர்.

AthibAn Tv