"அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீட்டை ஒருபோதும் ஏற்க முடியாது!" — மதுரையில் ஆளுநர் அர்லேகர் ஆய்வு நடத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

Dina AthibAn
0

"அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீட்டை ஒருபோதும் ஏற்க முடியாது!" — மதுரையில் ஆளுநர் அர்லேகர் ஆய்வு நடத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

சென்னை / மதுரை: மதுரையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் திடீரென அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதோடு, மாநில அரசின் நிர்வாக எல்லைக்குள் தலையிடும் வகையில் பேசியுள்ள விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாகத் தலையிடுவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கே எதிரானது" என்று தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களை கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

மாநில உரிமைகள் சமரசம் — எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடல்: இந்த விவகாரம் குறித்துக் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மதுரையில் ஆளுநர் அர்லேகர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியைப் போல அத்துமீறி ஆய்வு நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, 'வைகை நதியை மாநில அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகையே நேரடியாகக் களமிறங்கும்' என்று பேசியிருப்பது அப்பட்டமான அதிகார மீறலாகும். ஆளுநரை இப்படிச் தன்னிச்சையாக ஆய்வு செய்யவிட்டு, தற்போதைய தவெக அரசு மாநில உரிமைகளை முற்றிலுமாகச் சமரசம் செய்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் ஆளுங்கட்சி, ஆளுநர் தங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பயத்திலும் பதற்றத்திலும்தான் அவரது இந்த சட்டவிரோத ஆய்வை வேடிக்கை பார்க்கிறதோ? ஆளுநர் அரசு நிர்வாகத்தில் ஆய்வு செய்யும் இந்த ஆபத்தான நடைமுறையைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கறாராகக் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டம் வெடிக்கும் — வைகோ எச்சரிக்கை: மறுபுறம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், "மக்களின் வாக்குளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இறையாண்மை கொண்ட அரசுக்கு இணையாக, ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்திலும் ஆளுநர் தொடர்ந்து மூக்கை நுழைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இனியும் இத்தகைய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவருக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கும்" என எச்சரித்துள்ளார்.

அரசியல் விரோதப் போக்கை நிறுத்த வேண்டும் — சிபிஎம் கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது அறிக்கையில், "வைகை நதியைச் சீரமைக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை அல்லது வேண்டுகோள் விடுப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. ஆனால், அதையும் தாண்டி 'ஆளுநர் மாளிகையே நேரடியாகக் களமிறங்கும்' என்று பேசுவது அவர் வகிக்கும் அரசியல் சாசனப் பதவிக்கு அழகல்ல. ஆளுநர் உடனடியாகத் தனது அரசியல் விரோதப் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களாட்சி முறைமை தகர்க்கப்படுகிறது — சிபிஐ கவலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள கண்டனத்தில், "மக்களாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம், ஆளுநர் தனக்குத் தேவையான விபரங்களைக் கேட்டுப் பெற அரசியல் சாசனத்தில் இடமுண்டு. அதை விடுத்து, அதிகார வரம்புகளை மீறி அரசு நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவது, ஒட்டுமொத்த மக்களாட்சி முறைமையையே அடியோடு தகர்க்கும் செயலாகும்" என்று சாடியுள்ளார்.

ஜனநாயகத்தை அவமதிக்கும் போக்கு — அமைச்சர் வன்னியரசு சாடல்: விசிக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி உரிமையைப் பாதுகாப்பதாக இருக்கட்டும் அல்லது வைகை நதியை மீட்பதாக இருக்கட்டும், அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு மிகச் சிறப்பாகப் பார்த்துக்கொள்ளும். ஆளுநர் செய்ய வேண்டியது எல்லாம், முதல்வருக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவது மட்டும்தான். அதைவிடுத்து, அதிகாரிகளைத் தனியாக வரவழைத்துத் தன்னிச்சையாக ஆய்வுக் கூட்டங்களை நடத்த முயற்சிப்பது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எஸ்டிபிஐ கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ருதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களும் ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்குத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தால் தமிழக ஆளுநர் மாளிகைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!