மும்பை பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார் இந்தியாவின் தன்வி கன்னா! வேலவன் செந்தில்குமார் தோல்வி
மும்பை: ஹெச்சிஎல் (HCL) நிறுவனம் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு (SRFI) ஆகியவை இணைந்து நடத்தும் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் சர்வதேச தொடர் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தன்வி கன்னா, எகிப்து நாட்டின் பலத்த சவாலான ஃபரிதா வலீதை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்வி கன்னா 11-8, 10-12, 11-4, 11-9 என்ற செட் கணக்கில் ஃபரிதா வலீதை வீழ்த்தி, அபார வெற்றியோடு இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அதேவேளையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் முன்னணி வீரரான யாசின் ஷோடியை எதிர்த்துப் போராடினார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய எகிப்து வீரருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய வேலவன் செந்தில்குமார் 4-11, 8-11, 5-11 என்ற நேர் செட் கணக்கில் யாசின் ஷோடியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். தற்போது இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள தன்வி கன்னா மீது திரும்பியுள்ளது.


AthibAn Tv