நில அளவைத் துறையில் தொடரும் லஞ்சப் புகார்: நிர்வாக ரீதியிலான வசூலைத் தடுக்க ஊழியர்கள் அதிரடி வலியுறுத்தல்!

Dina AthibAn
0

நில அளவைத் துறையில் தொடரும் லஞ்சப் புகார்: நிர்வாக ரீதியிலான வசூலைத் தடுக்க ஊழியர்கள் அதிரடி வலியுறுத்தல்!

சென்னை: தமிழக நில அளவைத் துறையில் பதவி உயர்வு, பணியிட மாறுதல் மற்றும் துறை ரீதியிலான சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பணிகளுக்குப் பெருமளவில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக அந்தத் துறையின் ஊழியர்கள் பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளனர். நேர்மையான ஊழியர்களைப் பாதிக்கும் இந்த அவல நிலையைத் தடுத்து நிறுத்த, புதிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அரசு நில அளவைத் துறை ஊழியர்கள் சிலர் வேதனையுடன் தெரிவித்துள்ளதாவது: "துறையில் பதவி உயர்வு பெறும் அலுவலர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வட்டங்களில் (Taluks) பணி வழங்க வேண்டும் என்றால், இடத்திற்குத் தகுந்தாற்போல் 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுகிறது. பணம் கொடுக்க மறுப்பவர்கள் மிகத் தொலைதூரப் பகுதிகளுக்குத் தூக்கியடிக்கப்படுகிறார்கள் அல்லது ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி அவர்களின் பதவி உயர்வு திட்டமிட்டே தள்ளிப்போடப்படுகிறது."

மேலும் அவர்கள் கூறுகையில், "ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குப் பணியிட மாறுதல் பெற்று வரும் ஊழியர்களுக்கு, 3 முதல் 6 மாதங்கள் வரை தன்னிச்சையாகச் சம்பளத்தை நிறுத்தி வைக்கின்றனர். பின்னர், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மீண்டும் சம்பளம் போடும் சூழலுக்கு ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர். இதுமட்டுமின்றி, வேறு அரசுப் பணிகளுக்குச் செல்வதற்காகத் துறையிடம் 'தடையில்லாச் சான்று' (NOC) கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதற்கும் கட்டாயப் பணம் கேட்டு வற்புறுத்துகிறார்கள்" என்று குற்றம் சாட்டினர்.

நேர்மையான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்: பல்வேறு மாவட்டங்களில் லஞ்சம் பெறாமல் நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகள் குறிவைத்துத் தூக்கியடிக்கப்படுவதாகவும், அவர்கள் பணியில் சிறு தவறு செய்தால்கூட, பழிவாங்கும் நோக்கில் கடுமையான துறைரீதியான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய நிர்வாக ரீதியிலான நெருக்கடிகளால் நில அளவைத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இந்த லஞ்சக் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊழியர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!