88 வருடங்களுக்குப் பின் வரலாற்றுச் சாதனை: அல்ஜீரியாவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து!
வான்கூவர்: பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான நாக் அவுட் சுற்று ஆட்டம், கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்து மற்றும் அல்ஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி, 88 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றுக்குக் கெத்தாக முன்னேறியுள்ளது.
ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து அணி தனது அதிரடி கணக்கைத் தொடங்கியது. அந்த அணியின் வீரர் மன்சாம்பி, அல்ஜீரிய அணியின் தற்காப்பு அரணை (Defense) அசாத்திய வேகத்தில் கடந்து பந்தைக் கடத்திச் சென்றார். பெனால்டி பாக்ஸிற்குள் நுழைந்த அவர், பந்து எல்லைக் கோட்டை விட்டு வெளியேறாமல் தடுத்து, 6 அடி தூர பாக்ஸிற்குள் நின்றிருந்த எம்போலோவிடம் பாஸ் செய்தார். அதைச் சரியாகப் பயன்படுத்திய எம்போலோ பந்தை எளிதாகக் கோல் வலைக்குள் திணித்து அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.
இரண்டாம் பாதியில் பலமடைந்த சுவிஸ்: இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நொடிகளிலேயே, அதாவது 46-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி தனது 2-வது கோலை அடித்தது. அல்ஜீரிய தற்காப்பு வீரர்கள் பந்தைச் சரியாகக் 'கிளியர்' செய்யத் தவறியதால், பந்து நேராகச் சுவிட்சர்லாந்து வீரர் எண்டோயேவிடம் வந்தது. பாக்ஸின் விளிம்புப் பகுதியில் பந்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த எண்டோயே, மிக லாவகமாகக் கோல் கீப்பரை ஏமாற்றி வலைக்குள் செலுத்தினார்.
இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. இதன் பின்னர் ஆட்டத்தின் இறுதிவரை அல்ஜீரியா அணி கோல் அடிக்கக் கடுமையாகப் போராடியபோதிலும், சுவிட்சர்லாந்து அணியின் பலமான தற்காப்பு ஆட்டத்தால் அவர்களால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. இறுதியாகச் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குள் நுழைந்தது.

AthibAn Tv