Type Here to Get Search Results !

“49% பங்குகளை மாற்ற அதானி துணிந்தது எப்படி?”: விழிஞ்ஞம் துறைமுக விவகாரத்தில் அதானி குழுமத்திற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்!


“49% பங்குகளை மாற்ற அதானி துணிந்தது எப்படி?”: விழிஞ்ஞம் துறைமுக விவகாரத்தில் அதானி குழுமத்திற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் மிக முக்கியத் திட்டமான விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகத்தின் பங்குகளை, மாநில அரசின் எவ்வித முன் அனுமதியுமின்றி சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு விற்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்திருப்பது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. மாநில அரசுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் தன்னிச்சையாக அதானி குழுமம் எடுத்துள்ள இந்த முடிவு மிகவும் கண்டனத்திற்குரியது என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மிகக் கடுமையான சாடியுள்ளார்.

தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், "கேரள அரசுக்கும் அதானி குழுமத்திற்கும் இடையே போடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தின்படி, விழிஞ்ஞம் துறைமுகத்தின் 25 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்றாலே மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். அப்படியிருக்கையில், அரசிடம் எந்தவொரு அனுமதியையும் கோராமல், நேரடியாக 49 சதவீதப் பங்குகளை மாற்றியமைக்க அதானி குழுமம் துணிந்தது எப்படி? இது முற்றிலும் சட்டவிரோதமானது மட்டுமின்றி, அரசுடனான ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்" என்று குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த விவகாரத்தில் தற்போதைய அரசின் நிலைப்பாட்டைக் கேள்வி எழுப்பிய அவர், "அதானி குழுமத்தின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக, துறைமுகத் துறையைத் தன் வசம் வைத்துள்ள தற்போதைய முதலமைச்சர் வி.டி. சதீசன் என்ன மாதிரியான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை மக்களுக்கு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த அத்துமீறலை ஏதோ ஒரு பெரிய வெளிநாட்டு முதலீடு போலச் சில தரப்பினர் சித்தரிக்க முயல்கிறார்கள். ஆனால், இதில் எந்த உண்மையும் இல்லை, இது அதானி குழுமம் லாபம் சம்பாதிப்பதற்காக எடுத்துள்ள ஒரு சுயநல முயற்சியே தவிர வேறொன்றுமில்லை" என்று சாடினார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான 'எம்.எஸ்.சி' (MSC) இந்தத் துறைமுகத்தின் பெரும்பான்மைப் பங்குகளைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்தால், விழிஞ்ஞம் துறைமுகம் அந்த ஒரு தனி நிறுவனத்தின் ஏகபோக ஆதிக்கத்திற்குள் சென்றுவிடும் என்றும், இது கேரள மாநிலத்திற்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். முன்னதாக, இந்த விழிஞ்ஞம் துறைமுகப் பங்கு விற்பனை தொடர்பாக அதானி குழுமம் தங்களுக்கு எவ்விதத் தகவலையும் முறைப்படி தெரிவிக்கவில்லை என்று முதலமைச்சர் வி.டி. சதீசன் கடந்த புதன்கிழமை சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டது இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.