அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு: அறக்கட்டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை!
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கைப் பெட்டியில் நடைபெற்ற பெரும் திருட்டு வழக்கு தொடர்பாக, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பக் ராயிடம் அயோத்தி நகர காவல் துறையினர் நேற்று சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜினாமா; இதுவரை 8 பேர் கைது
ராமர் கோயில் காணிக்கை திருட்டுப் புகார் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அதன் அறக்கட்டளை முக்கிய நிர்வாகிகளான சம்பக் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சம்பக் ராய், "காணிக்கை திருட்டு விவகாரத்தில் எனக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. முக்கியக் குற்றவாளியான டின்னு (என்ற) ராம் சங்கர் யாதவ் இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்வார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தகவல் எனக்குத் தெரிந்தவுடனேயே, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு நான்தான் உடனடியாகக் கடிதம் எழுதினேன். எனினும், கோயிலின் காணிக்கை விஷயத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எனது கடமையும் பொறுப்பும் ஆகும்" என்று விளக்கமளித்துள்ளார்.
சிசிடிவி அதிகாரி அர்ஜுன் தேவ் மீது சந்தேகம்
இவ்விசாரணையில், ராமர் கோயிலில் உள்ள சுமார் 1,600 சிசிடிவி (CCTV) கேமராக்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த தொழில்நுட்ப அதிகாரி அர்ஜுன் தேவ் என்பவரின் மீது போலீஸாருக்குப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இவர் கோயில் கட்டப்படுவதற்கு முன்பாக, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அங்கு ரேடியோ பராமரிப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக இவரைப் பணிமாற்றம் செய்ய விடாமல் அறக்கட்டளை தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், திருட்டுப் புகார் வெளிச்சத்திற்கு வந்த சில நாட்களுக்கு முன்பு அவர் லக்னோவிற்கு அதிரடியாகப் இடமாற்றம் செய்யப்பட்டார்.
விசாரணையில் தெரிந்த அதிர்ச்சித் தகவல்: கோயிலில் திருட்டு நடப்பது தெரிந்தும் அர்ஜுன் தேவ் உயர் அதிகாரிகளுக்கு ஏன் தகவல் அளிக்கவில்லை? கேமரா பதிவுகளைச் சேமிக்காமல் தவிர்த்தது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், முக்கியக் குற்றவாளியான டின்னு யாதவுடன் அர்ஜுன் தேவ் நெருங்கிய நட்பில் இருந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனால் லக்னோவில் உள்ள அவரை மீண்டும் அயோத்திக்கு வரவழைத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களுடன், கோயிலில் பணியமர்த்தப்பட்டிருந்த தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் 400 பேரும் தற்போது போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
விஹெச்பி (VHP) தலைவர் அலோக் குமார் அறிக்கை
இந்த விவகாரம் குறித்து விஸ்வ இந்து பரிஷத் (VHP) சர்வதேச தலைவர் அலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காணிக்கை திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், 'குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட மாட்டோம்' என்று அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவை நான் ஆதரிக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கும் சட்ட உதவி பெறுவதற்குக் கடமை உண்டு; அதற்குத் தடை விதிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றமே ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. எனவே, அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

AthibAn Tv