சவுகார்பேட்டையில் துணிகரம்: நகை உருக்கும் கடைக்குள் புகுந்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை—சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த உரிமையாளர், 3 பேர் கைது!
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை உருக்கும் கடைக்குள் முகமூடி அணிந்து புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், கடையின் உரிமையாளரைத் தாக்கி 1.5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தப்பியோடிய கொள்ளையர்களைக் கடையின் உரிமையாளர் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பொதுமக்களின் உதவியோடு ஒருவரைப் பிடித்தார். இதன் தொடர்ச்சியாகப் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் சில மணி நேரங்களிலேயே மற்ற இரு கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டு, நகைகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டன.
பாரிமுனை பிரகாசம் சாலை பகுதியைச் சேர்ந்த அங்கித் திலீப் மோர் (26) என்பவர், சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை உருக்கும் மற்றும் நகைகளின் தரத்தை ஆய்வு செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது கடையில் தனியாகப் பணியில் இருந்தபோது, திடீரென முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கித்தை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடினர்.
இதனால் நிலைகுலையாத அங்கித், உடனடியாகக் கூச்சலிட்டவாறு பக்கத்து கடைக்காரர்களின் உதவியுடன் தப்பியோடிய கொள்ளையர்களைத் துரத்தினார். இதில் நீண்ட தூரம் விரட்டிச் சென்று ஒரு நபரை மட்டும் அங்கித் மடக்கிப் பிடித்தார். மற்ற இருவர் நகைகளுடன் தப்பினர். பொதுமக்களிடம் சிக்கிய நபர் உடனடியாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற அருண் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அருணைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அருணிடம் போலீஸார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் அவருடன் இணைந்து ஈடுபட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (23) மற்றும் ஹேராம் என்ற ரமணா (24) என்பதும், அவர்கள் இருவரும் வண்ணாரப்பேட்டை பழைய கல்லறைச் சாலையில் ரகசியமாகப் பதுங்கியிருப்பதும் அம்பலமானது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற யானைக்கவுனி தனிப்படை போலீஸார், பதுங்கியிருந்த லோகேஷ் மற்றும் ரமணாவை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டன. இச்சம்பவம் சவுகார்பேட்டை வணிகர்கள் மத்தியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


AthibAn Tv