“உலகளாவிய எரிசக்தி சவாலை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது” - ரூ.1.13 லட்சம் கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பெருமிதம்!
பச்சபத்ரா (ராஜஸ்தான்): "மேற்கு ஆசியப் போர் காரணமாக உலகம் சந்தித்த 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி (ஆற்றல்) சவாலை, மத்திய அரசின் திறம்பட்ட கொள்கைகளால் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்துள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.1.13 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைத் திறந்து வைத்தும், சில முக்கியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார்.
பிரதமரின் உரை மற்றும் திட்டங்களின் விரிவான விவரம்:
சமையல் காஸ் விலை ரூ.2,000 ஆகாமல் தடுத்தோம்:
பச்சபத்ராவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
"மேற்கு ஆசியப் போரால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ரூ.75,000 கோடி இழப்பை மத்திய அரசே ஏற்றுக்கொண்டது.
போருக்கு முன்பாக 25 நாடுகளிடம் இருந்து மட்டுமே கச்சா எண்ணெய் வாங்கிய நாம், நெருக்கடி காலத்தில் அதை 40-க்கும் மேற்பட்ட நாடுகளாக உயர்த்தினோம். மத்திய அரசின் இந்த அதிரடி உத்திகளால், இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.2,000 வரை உயரும் அபாயம் தடுக்கப்பட்டு, பொதுமக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டது."
தேசத்தின் முதல் அதிநவீன பிஎஸ்-6 பெட்ரோகெமிக்கல் வளாகம்:
ராஜஸ்தானின் பார்மர் பிராந்திய தார் பாலைவன எண்ணெய் வயல்கள், நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன. இதுவரை இங்கிருந்து 670 கி.மீ தூரமுள்ள குஜராத் ஜாம்நகர் ரிலையன்ஸ் ஆலைக்குக் கொண்டு செல்லப்பட்டே கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வந்தது.
இதற்கு மாற்றாக, ராஜஸ்தான் பலோத்ரா மாவட்டம் பச்சபத்ராவில் ரூ.79,459 கோடி செலவில், 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைப் பிரதமர் மோடி நேற்று தேசத்திற்கு அர்ப்பணித்தார். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆலை, நாட்டின் முதல் அதிநவீன பிஎஸ்-6 (BS-VI) தரத்திலான பெட்ரோகெமிக்கல் வளாகம் ஆகும்.
ராஜஸ்தானில் ரூ.1.06 லட்சம் கோடி திட்டங்கள்:
பச்சபத்ரா சுத்திகரிப்பு ஆலை தவிர, ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்:
ஜோத்பூர் விமான நிலையம்: ரூ.480 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தைத் திறந்து வைத்தார்.
புதுப்பிக்கப்பட்ட உதான் (UDAN) திட்டம்: சிறிய நகரங்களின் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த, அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.28,840 கோடி செலவிடப்படும் இத்திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ரயில்வே திட்டங்கள்: ரூ.13,000 கோடி மதிப்பிலான ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.900 கோடி மதிப்பிலான சுரு-சதுல்பூர் மற்றும் சுரு-ரத்தன்கர் ரயில் வழித்தடத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
குஜராத்தில் ரூ.7,500 கோடியில் செமிகண்டக்டர் ஆலை:
ராஜஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு குஜராத்தின் சானந்த் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு ரூ.7,500 கோடி முதலீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்தார். தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் தற்சார்பை உயர்த்தும் இந்த ஆலையில், ஆண்டிற்கு 500 கோடி செமிகண்டக்டர் ‘சிப்’களை (Chips) தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

AthibAn Tv